பருவமழையால் தடைபட்ட மண்பாண்ட தொழில் மீண்டும் சுறுசுறுப்பு அரசு சலுகை வழங்க கோரிக்கை


பருவமழையால் தடைபட்ட மண்பாண்ட தொழில் மீண்டும் சுறுசுறுப்பு அரசு சலுகை வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 16 Oct 2018 5:00 AM IST (Updated: 16 Oct 2018 2:18 AM IST)
t-max-icont-min-icon

தராவியில், பருவமழையால் தடைப்பட்டு இருந்த மண்பாண்ட தொழில் தற்போது மீண்டும் சுறுசுறுப்பு அடைந்து உள்ளது. இத்தொழிலுக்கு அரசு சலுகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

மும்பை,

மும்பை தாராவி பகுதியில் மண்பாண்ட தொழில் நடந்து வருகிறது. தாராவியில் தயாரிக்கப்படும் மண் பானைகள் மும்பை, நவிமும்பை, தானே, புனே, நாசிக் உள்பட மராட்டிய மாநிலம் முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. மும்பையில் மழைக்காலம் காரணமாக ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாதம் மண்பாண்ட தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது.

பருவமழை ஓய்ந்து தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கோடை காலத்தை போல் வெயிலின் உக்கிரம் அதிகமாக இருக்கிறது.வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக மண்பானை குளிர்ந்த நீரை பொதுமக்கள் விரும்பி பருகி வருகின்றனர். இதன் காரணமாக மண்பானைகளின் விற்பனையும் அதிகரித்துள்ளது.

எனவே மழையால் தடைப்பட்டு இருந்த மண்பானைகளின் உற்பத்தி தற்போது மீண்டும் களை கட்ட தொடங்கியுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், மண் பானைகளின் உற்பத்தி அதிகரித்துள்ளது.

நகரப்பகுதியில் களிமண் கிடைக்காததால், இத்தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் வெளியில் இருந்து லாரிகள் மூலம் மண் வாங்கி வந்து மண்பாண்டங்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த தொழிலுக்கு தேவையான தண்ணீரும் தங்கு தடையின்றி கிடைப்பதால், மும்பையில் இத்தொழில் மும்முரம் அடைந்துள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.

மண் பானை தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வரும் ஜெயில் ஜானி என்பவர் கூறியதாவது:-

மராட்டிய அரசு சலுகை விலையில் மண்பாண்டம் தயாரிப்பதற்கான கருவி தந்தால் நன்றாக இருக்கும். மண்பாண்டம் சூடு செய்யும் போது புகையினால் அக்கம்பக்கத்தினர் அவதிப்பட்டு வருகின்றனர்.

அதற்கான புகையை கட்டுப்படுத்தும் கருவியை சலுகை விலையில் தந்தால் சுற்று சூழல் பாதிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story