மணப்பாறையில் சாலையில் தேங்கிய நீரில் காகித கப்பல் விட்டு பா.ஜ.க.வினர் போராட்டம்


மணப்பாறையில் சாலையில் தேங்கிய நீரில் காகித கப்பல் விட்டு பா.ஜ.க.வினர் போராட்டம்
x
தினத்தந்தி 16 Oct 2018 4:15 AM IST (Updated: 16 Oct 2018 3:34 AM IST)
t-max-icont-min-icon

மணப்பாறையில் உடைந்த காவிரி குடிநீர் குழாயை உடனடியாக சரிசெய்ய கோரி, சாலையில் தேங்கிய நீரில் காகிதத்தில் செய்த கப்பல் விட்டு பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மணப்பாறை,

மணப்பாறையில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே மூன்று சாலைகள் சந்திக்கும் இடத்தில் காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு இரண்டு சாலைகளில் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மற்றும் ஏராளமான வாகனங்கள் செல்லும் பிரதான சாலையில் தண்ணீர் வீணாக செல்வதை தடுக்க, குழாயை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஏற்கனவே சுமார் 6 முறைக்கு மேல் குழாயில் அதே இடத்தில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக வெளியேறியது. ஆகவே அந்த குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்ய வேண்டும், மீண்டும் உடைப்பு ஏற்படாத வகையில் அந்த பணியை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று பா.ஜ.க.வினர், குழாயில் இருந்து வெளியேறிய தண்ணீரில் காகிதத்தில் கப்பல் செய்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் பா.ஜ.க. ஒன்றியத் தலைவர் சுப்ரமணி, பொருளாதார பிரிவு மாவட்ட துணைத் தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் பா.ஜ.க.வினர் கலந்து கொண்டனர். அப்போது, குழாயில் ஏற்பட்ட உடைப்பை உடனடியாக சரிசெய்து மக்களுக்கு தடையின்றி காவிரி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உடைப்பை சரி செய்யாவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடத்த உள்ளதாகவும் கூறினர்.

Next Story