ஈரோட்டில் டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிர்ப்பு தர்ணாவில் ஈடுபட்ட 53 பேர் கைது


ஈரோட்டில் டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிர்ப்பு தர்ணாவில் ஈடுபட்ட 53 பேர் கைது
x
தினத்தந்தி 15 Oct 2018 9:30 PM GMT (Updated: 15 Oct 2018 10:58 PM GMT)

ஈரோட்டில் டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட 53 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு, 

ஈரோடு வெண்டிபாளையம் மணலி கந்தசாமி வீதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கடை நேற்று இரவு 7 மணிக்கு திறக்கப்பட்டது. இதற்காக மொடக்குறிச்சி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

இதனை அறிந்த அந்த பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கடையின் முன்பு ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் கடையை மூடக்கோரி கடையின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து ஈரோடு டவுன் போலீஸ் துணை சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் மற்றும் மொடக்குறிச்சி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள், ‘இங்கு டாஸ்மாக் கடை திறந்ததால் குடிமகன்களால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். இங்கு டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது என்று ஏற்கனவே நாங்கள் 3 முறை கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம். எனினும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியதை தொடர்ந்து கடை நேற்று திறக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கான அனுமதியை உடனடியாக மாவட்ட நிர்வாகம் ரத்து செய்ய வேண்டும்’ என்றனர்.

அதற்கு போலீசார், ‘இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே நீங்கள் அனைவரும் தர்ணா போராட்டத்தை கைவிட்டு இங்கிருந்து கலைந்து செல்லுங்கள்’ என்றனர். ஆனால் அவர்கள் அதை ஏற்காமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர். அப்போது பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 22 பெண்கள் உள்பட 53 பேரை இரவு 8.30 மணி அளவில் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் போலீஸ் வேனில் ஏற்றப்பட்டு மொடக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அடைத்து வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அவர்கள் அனைவரும் 10 மணி அளவில் விடுதலை செய்யப்பட்டனர். 

Next Story