நீக்கம் செய்யப்பட்ட மாணவரை மீண்டும் சேர்க்க வலியுறுத்தி அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் சாலை மறியல்


நீக்கம் செய்யப்பட்ட மாணவரை மீண்டும் சேர்க்க வலியுறுத்தி அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 17 Oct 2018 4:00 AM IST (Updated: 17 Oct 2018 12:25 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் திரு.வி.க. அரசு கல்லூரியில் இருந்து நீக்கப்பட்ட மாணவர் மாரிமுத்துவை மீண்டும் சேர்க்க வலியுறுத்தி மாணவ-மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவாரூர்,

திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை தமிழ்த்துறை மாணவர் மாரிமுத்து மாணவர் அமைப்பின் நிர்வாகியாக உள்ளார். இவர் தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. அப்போது கல்லூரி நிர்வாகத்திற்கு இடையூறாகவும், ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டதாக மாரிமுத்துவை கல்லூரி நிர்வாகம் நீக்கம் செய்தது.

இதனை தொடர்ந்து நேற்று நீக்கம் செய்யப்பட்ட மாணவர் மாரிமுத்துவை உடனடியாக கல்லூரியில் சேர்க்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி திருவாரூர் திரு.வி.க. அரசு கல்லூரி மாணவர்கள் கல்லூரி முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க கிளை தலைவர் சிவபாலன் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் ஜோஸ்வா முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சுர்ஜித், மாவட்ட தலைவர் பிரகாஷ், கிளை துணை செயலாளர் மதன் உள்பட ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார், தாசில்தார் குணசீலி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் சாலை மறியலை கைவிட்டு மாணவ-மாணவிகள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தினால் திருவாரூர்-நாகை சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் சாலையில் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டு இருந்தது.

Next Story