பயணிகளை மிரட்டி கீழே இறக்கிவிட்டு ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவருக்கு சரமாரி அரிவாள் வெட்டு


பயணிகளை மிரட்டி கீழே இறக்கிவிட்டு ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 17 Oct 2018 4:30 AM IST (Updated: 17 Oct 2018 1:15 AM IST)
t-max-icont-min-icon

காளையார்கோவில் அருகே ஓடும் பஸ்சை மறித்து நிறுத்தி பயணிகளை கீழே இறக்கி விட்டு, கல்லூரி மாணவர் ஒருவரை சரமாரியாக வெட்டிய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

காளையார்கோவில்,

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே சூசையப்பர்பட்டினத்தைச் சேர்ந்தவர் ரவி. இவருடைய மகன் சிவக்குமார் (வயது 23). இவர் தேவகோட்டையில் உள்ள ஒரு தனியார் கலைக்கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று மாலை கல்லூரி முடிந்து சிவக்குமார் வழக்கம் போல தனியார் பஸ்சில் காளையார்கோவிலுக்கு வந்து கொண்டிருந்தார்.

காளையார்கோவில் அருகே ஆண்டிச்சியூரணி விலக்கு பகுதியில் பஸ் வந்த போது, எதிரே ஒரு மோட்டார்சைக்கிளில் 3 மர்ம நபர்கள் அரிவாளுடன் வந்து பஸ்சை மறித்து நிறுத்தினர். அவர்கள் பஸ்சில் இருந்த பயணிகளை மிரட்டி கீழே இறக்கிவிட்டனர். பின்பு பஸ்சில் இருந்த சிவக்குமாரை மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.

அதில் மாணவர் சிவக்குமார் தலை மற்றும் உடல் முழுவதும் பலத்த வெட்டு காயத்துடன் ரத்த வெள்ளத்தில் விழுந்து உயிருக்கு போராடினார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் அங்கிருந்து வேகமாக மோட்டார்சைக்கிளில் ஏறி தப்பி சென்றுவிட்டனர்.

இதையடுத்து பஸ்சில் வந்த பயணிகள் சிவக்குமாரை காளையார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி செய்யப்பட்ட பின்பு, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவலறிந்து வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், காளையார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் ஆகியோர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். மேலும் தப்பியோடிய மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story