திருப்பூரில், குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்: ரூ.2 லட்சம் பட்டாசுகள் சிக்கின
திருப்பூரில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 டன் எடையுள்ள புகையிலை பொருட்கள் மற்றும் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருப்பூர்,
திருப்பூர் ஏ.பி.டி.ரோடு கரைத்தோட்டம் பகுதியில் ஒரு மளிகை கடையில் புகையிலை பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக திருப்பூர் மத்திய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து உடனடியாக போலீசார் நேற்று மாலை அந்த கடைக்கு சென்று சோதனை நடத்தினார்கள்.
அப்போது அருகில் இருந்த குடோனுக்கு சென்ற போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அந்த குடோனுக்குள் மூடை, மூடையாக புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது. மேலும் தீபாவளி பண்டிகைக்கு விற்பனை செய்வதற்காக பெட்டி, பெட்டியாக பட்டாசுகளும் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அத்துடன் இவற்றை பதுக்கி வைத்திருந்த கடை உரிமையாளரான திருப்பூர் வெள்ளியங்காட்டை சேர்ந்த லிங்கம்(வயது 47) என்பவரை போலீசார் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது குறித்து போலீசார் கூறும்போது, குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 டன் எடையுள்ள புகையிலை பொருட்கள் மற்றும் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. புகையிலை பொருட் களை மொத்தமாக வாங்கி குடோனில் பதுக்கி வைத்திருந்து பின்னர் பல்வேறு கடைகளுக்கு விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.மேலும் தீபாவளி பண்டிகைக்கு விற்பனை செய்யும் வகையில் அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்த பட்டாசுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து விசாரணை நடக்கிறது என்றனர்.
கடை மற்றும் குடோனில் போலீசார் அதிரடி சோதனை நடத்திய சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று மாலை பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story