திருவண்ணாமலை மாவட்டத்தில் டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்பட்டால் அபராதம் - கலெக்டர் எச்சரிக்கை


திருவண்ணாமலை மாவட்டத்தில் டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்பட்டால் அபராதம் - கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 17 Oct 2018 5:00 AM IST (Updated: 17 Oct 2018 3:10 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரப்பும் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கலெக்டர் தலைமையில் வருவாய்த் துறை, மருத்துவத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகம், பேரூராட்சிகள், மகளிர் திட்டம், பள்ளிக் கல்வித்துறை உள்பட பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து 4 கண்காணிப்பு அலுவலர்கள், 18 மண்டல அலுவலர்கள் இதற்காக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

ஒவ்வொரு வாரமும் 2 நாட்கள் காலை 6 மணி முதல் 8 மணி வரை வீடு, வீடாகக் சென்று டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், சுய உதவிக் குழுவினர், அங்கன்வடி பணியாளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 43 ஆயிரம் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மாவட்டம் முழுவதும் பல்வேறு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் டெங்கு கொசுப் புழுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அதனை ஒழிக்கும் பணிகள் மிகப் பெரிய அளவில் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பள்ளி, கல்லூரிகளில் கல்வித்துறை மூலமாக டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரப்பும் கொசுப் புழுக்கள் உற்பத்தியகும் குடியிருப்புகளுக்கு ரூ.150 முதல் ரூ.10 ஆயிரம் வரையும், கட்டுமான தளங்களுக்கு ரூ.500 முதல் ரூ.1 லட்சம் வரையும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் 50-க்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளவைக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.10 ஆயிரம் வரையும், 50-க்கும் குறைவான படுக்கைள் உள்ளவைக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரையும் அபராதம் விதிக்கப்படும்.

அதேபோல் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்கள் டெங்கு கொசுப்புழு கண்டறியப்பட்டால் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரையும், 1000-க்கும் குறைவான மாணவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையும் அபராதம் விதிக்கப்படும்.

தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு ரூ.500 முதல் ரூ.10 லட்சம் வரையும், அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ரூ.10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையும் ஆய்வு செய்யும் போது ஆதாரங்கள் காணப்பட்டால் அபராதம் விதிக்கப்படும். அபராதம் விதிக்கப்பட்ட இடங்களில் 3 தடவைக்கு மேல் கொசுப்புழு கண்டுபிடிக்கப்பட்டால் வழக்கு பதியப்படும் அல்லது சமூக சேவை செய்ய உட்படுத்தப்படுவார்கள். வருகிற 24-ந் தேதி (புதன்கிழமை) முதல் அபராதம் வசூலிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story