நாட்டார் கால்வாயில் தண்ணீர் திறக்க 16 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் அமைச்சரிடம் மனு


நாட்டார் கால்வாயில் தண்ணீர் திறக்க 16 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் அமைச்சரிடம் மனு
x
தினத்தந்தி 18 Oct 2018 4:15 AM IST (Updated: 18 Oct 2018 1:13 AM IST)
t-max-icont-min-icon

நாட்டார் கால்வாயில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி 16 கிராம விவசாயிகள் அமைச்சர் பாஸ்கரனிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

மானாமதுரை,

மானாமதுரைக்கு நேற்று வந்த அமைச்சர் பாஸ்கரனிடம் நாட்டார் கால்வாயில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி நாட்டார் கால்வாய் பாசன சங்க தலைவர் துபாய் காந்தி தலைமையில் மானாமதுரை மற்றும் அதை சுற்றியுள்ள 16 கிராம விவசாயிகள் சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:– சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு வைகையாற்றில் கிருங்காக்கோட்டை என்ற இடத்தில் இருந்து நாட்டார் கால்வாய் வெட்டப்பட்டது.

கிருங்காக்கோட்டையில் இருந்து ராஜகம்பீரம் புதூர் கண்மாய்க்கு வரும் தண்ணீரானது அந்த பகுதியில் உள்ள கண்மாய்களில் நிரம்பி மறுகால் பாய்ந்து கிளங்காட்டூர், மேலமேல்குடி, அன்னவாசல் ஆகிய 3 கிராமங்களுக்கு பிரிந்து செல்கிறது. இதில் கிளங்காட்டூர் கண்மாய் நிரம்பி வளநாடு, சேகரேந்தல், சோமாத்தூர் உள்பட 16 கிராமங்களில் உள்ள கண்மாய்களுக்கு செல்கிறது.

மேலும் இந்த கால்வாய் வெட்டியதில் இருந்து இதுவரை தண்ணீர் திறக்கப்படவில்லை. இதுகுறித்து இந்த பகுதி மக்கள் பல முறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இந்த கிராம மக்கள் தங்களது வீடுகளில் வளர்க்கும் ஆடு, மாடுகளுக்கு குடிக்க கூட தண்ணீர் இல்லாமல் சிரமம் அடைந்து வருகின்றனர்.

மேலும் இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் பலர் பிழைப்பு தேடி வெளியூர்களுக்கு சென்று விட்டனர். தற்போது வைகையில் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதால் நாட்டார் கால்வாயில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் பாஸ்கரன் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.


Next Story