ஆவுடையார்கோவில் அருகே சேதமடைந்த புதிய சாலையில் சீரமைக்கும் பணி தொடங்கியது


ஆவுடையார்கோவில் அருகே சேதமடைந்த புதிய சாலையில் சீரமைக்கும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 18 Oct 2018 4:15 AM IST (Updated: 18 Oct 2018 1:55 AM IST)
t-max-icont-min-icon

ஆவுடையார்கோவில் அருகே புதிததாக அமைக்கப்பட்டு சேதமடைந்த சாலையில் சீரமைக்கும் பணி தொடங்கியது.

ஆவுடையார்கோவில்,

ஆவுடையார்கோவில் அருகே உள்ள பாம்பாற்றின் குறுக்கே கடந்த 2016-ம் ஆண்டு நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.5 கோடியே 70 லட்சம் மதிப்பில் பேயாடிக்கோட்டை-சிறுகாம்பூர் உயர்மட்ட பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. இந்த பாலம் புதுக்கோட்டை-ராமநாதபுரம் மாவட்டத்தை இணைக்கும் வகையில் உள்ளதால், சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெறுவார்கள்.

இந்த பாலத்தின் கட்டுமான பணிகள் நிறைவுபெற்றதை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 4-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த பாலத்தை ஒட்டியுள்ள பகுதிகளிலும் புதியதாக சாலை அமைக்கப்பட்டது. பாலம் திறக்கப்பட்ட 4 மாதத்தில் பாலத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் போடப்பட்ட சாலைகளில் விரிசல் ஏற்பட்டு, பல இடங்களில் சாலை சேதமடைந்தது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வந்தனர்.

இந்நிலையில் அமைக்கப்பட்டு 4 மாதத்தில் சேதமடைந்த சாலையை நேற்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் உடனடியாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முன்னிலையில், பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் சேதமடைந்த சாலையை முற்றிலும் அகற்றிவிட்டு, புதிய சாலை அமைக்கும் பணி நேற்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இது குறித்து நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சுந்தர்ராஜன் கூறுகையில், பாலம் உயரமாக அமைக்கப்பட்டு உள்ளதால், பாலத்தை ஒட்டியுள்ள சாலை சாய்வாக உள்ளது. மேலும் பாலத்தை ஓட்டியுள்ள பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டதால்தான் சாலையில் ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டு, சாலை சேதமடைந்து உள்ளது. தற்போது சேதமடைந்தை சாலையை முற்றிலும் அகற்றிவிட்டு, புதிய சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது என்றார்.

Next Story