தோட்ட தொழிலாளர்களிடம் இருந்து தொழில்வரி பிடித்தம் செய்வது பரிசீலிக்கப்படும் - அரசு முதன்மை செயலாளர் தகவல்


தோட்ட தொழிலாளர்களிடம் இருந்து தொழில்வரி பிடித்தம் செய்வது பரிசீலிக்கப்படும் - அரசு முதன்மை செயலாளர் தகவல்
x
தினத்தந்தி 18 Oct 2018 5:00 AM IST (Updated: 18 Oct 2018 2:15 AM IST)
t-max-icont-min-icon

‘தோட்ட தொழிலாளர்களிடம் இருந்து தொழில்வரி பிடித்தம் செய்வது பற்றி அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று பரிசீலிக்கப்படும்’ என்று தமிழக அரசின் முதன்மை செயலாளர் கூறினார்.

கோவை,

தமிழ்நாடு தோட்ட தொழில் அதிபர் சங்கத்தின் 65-வது ஆண்டு விழா கோவையில் நடந்தது. தமிழ்நாடு தோட்ட தொழில் அதிபர்கள் சங்க துணைத் தலைவர் சேகர் நாகராஜன் வரவேற்றார். விழாவில் தமிழக அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை முதன்மை செயலாளர் சுனில்பாலிவால் கலந்து கொண்டு பேசியதாவது:-

தேயிலை உற்பத்தி அதிகரித்தால் விலை குறைகிறது. தேயிலை தொழிலில் பல்வேறு ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன. தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வு, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை காரணமாகவும் தேயிலை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளின் கடும் போட்டி காரணமாக தேயிலை ஏற்றுமதியும் சவாலாக உள்ளது. நடப்பு ஆண்டில் வெள்ளப்பெருக்கினால் தேயிலை உற்பத்தி வெகுவாக பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இப்போது உள்ள தேக்க நிலைமை மாறி தேயிலை வர்த்தகம் விரைவில் சீராகும் என்று எதிர்பார்க்கிறோம்.

ஆண்டுதோறும் இந்தியாவில் இருந்து 200 கோடி டாலர் மதிப்புள்ள தேயிலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. எனவே நாட்டின் மொத்த ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கும் தேயிலை தொழில் சீரடைய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். தேயிலைக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். தினச்சம்பள அடிப்படையில் பணியாற்றும் தோட்ட தொழிலாளர்களிடம் தொழில்வரி பிடித்தம் செய்வதை உள்ளாட்சி அமைப்புகள் நிறுத்த வேண்டும் என்று இங்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. தொழில் வரி, சொத்து வரியை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் தான் வசூலிக்கின்றன. தேயிலை தோட்டங்களில் தெரு விளக்கு, சாலை, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க உள்ளாட்சி அமைப்புகள் அந்த நிதியை பயன்படுத்துகின்றன. நிதி வசூலிப்பதின் மூலமே அடிப்படை வசதிகளை உள்ளாட்சி அமைப்புகள் செய்ய முடியும். இருந்தபோதிலும் தேயிலை தோட்ட தொழிலாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் தொழில் வரியை ரத்து செய்வது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்கப்படும். கேரளாவைப்போல தோட்டங்களில் தேயிலை, காபி, ரப்பர் ஆகியவை தவிர மாற்றுப் பயிர்களையும் நடவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று இங்கு கோரிக்கை வைத்தனர். ஆனால் இது வேளாண்மைத் துறையின் கட்டுப்பாட்டில் வருவதால் அந்த துறை செயலாளருடன் பேசி தீர்வு காணப்படும் என்று அவர் பேசினார்.

விழாவில், உபாசி துணை தலைவர் நாகப்பன், கோவை கேபிடல் நிறுவன தலைவர் டி.பாலசுந்தரம் மற்றும் வால்பாறை தொகுதி எம்.எல்.ஏ., கஸ்தூரிவாசு, தேயிலை தோட்ட தொழிற் சங்க கூட்டுக்குழு தலைவர் வால்பாறை வி. அமீது மற்றும் தேயிலை தோட்ட அதிபர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும். எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு முதன்மை செயலாளர் சுனில் பாலிவால் பரிசு, சான்றிதழ்களை வழங்கினார். முன்னதாக தமிழ்நாடு தோட்ட தொழில் அதிபர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு முதன்மை செயலாளரிடம் அளிக்கப் பட்டது.


Next Story