வீடு கட்ட கடன் தருவதாக வாலிபரிடம் மோசடி; சென்னை தம்பதி கைது
இன்சூரன்ஸ் நிறுவனம் என்ற பேரில் வீடு கட்ட கடன் தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.35 ஆயிரம் மோசடி செய்த சென்னை தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரியை அடுத்த பாகூர் இருளஞ்சந்தை பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் இளையராஜா(வயது 33). தனியார் நிறுவன ஊழியர். இவரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையை சேர்ந்த ஒரு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக போனில் தொடர்பு கொண்டனர். அவர்கள் தெரிவித்த பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை உண்மை என்று நம்பி அந்த இன்சூரன்ஸ் நிறுவனத்தில் உறுப்பினராக சேர்ந்துள்ளார்.
இதன்பின் மீண்டும் இளையராஜாவை தொடர்பு கொண்டு பேசி, தங்களது நிறுவனத்தில் வீடு கட்ட ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை கடன் தொகை பெறலாம் என்று தெரிவித்துள்ளனர். இதை நம்பி அவரும் கடன் தொகை கேட்டதாக தெரிகிறது. உடனே அவர்கள் அதற்கான ஆவண கட்டணமாக ரூ.35 ஆயிரம் செலுத்துமாறு கூறியுள்ளனர். பணம் கிடைக்கும் என்ற ஆசையில் இளையராஜாவும் 2 தவணையாக அவர்கள் கொடுத்த வங்கிக்கணக்கில் ரூ.35 ஆயிரம் செலுத்தினார்.
ஆனால் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக தெரிவித்தவர்கள் வீடு கட்ட கடன் எதுவும் தரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த இளையராஜா தனக்கு அழைப்பு வந்த செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ள முயன்றார். அப்போது அந்த எண் தொடர்பில் இல்லை என்று தகவல் வந்தது. அப்போது தான் அவருக்கு மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது.
இது குறித்து புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் நிலையத்தில் இளையராஜா புகார் செய்தார். இந்த வழக்கு ஆன்–லைன் தொடர்பான மோசடி என்பதால் சைபர் கிரைம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கீர்த்தி வர்மனிடம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவர் விசாரணை நடத்தினார்.
விசாரணையில் சென்னையை சேர்ந்த ஸ்ரீராம் என்ற கோபாலகிருஷ்ணன்(32) என்பவர் இன்சூரன்ஸ் நிறுவனம் என்ற பெயரில் இளையராஜாவிடம் ரூ.35 ஆயிரம் மோசடி செய்தது தெரியவந்தது. அதற்கு ஸ்ரீராமின் மனைவி ரேவதி உடந்தையாக இருந்துள்ளார். அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.