வியாபாரியை கடத்தி ரூ.1 லட்சம் கேட்டு மிரட்டிய 2 கொள்ளையர்களை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்: கலபுரகி அருகே பரபரப்பு
கலபுரகி அருகே வியாபாரியை கடத்தி ரூ.1 லட்சம் கேட்டு மிரட்டிய கொள்ளையர்கள் 2 பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். போலீஸ்காரர்களை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றபோது இந்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
கலபுரகி,
கலபுரகி மாவட்டம் சவுக் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிப்பவர் ராமகிருஷ்ணா. இருசக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் மெக்கானிக்கான இவர், மோட்டார் சைக்கிள்கள் வாங்கி விற்கும் வியாபாரமும் செய்து வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வெளியே சென்றுவிட்டு ராமகிருஷ்ணா வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ராமகிருஷ்ணாவை மர்மநபர்கள் சிலர் கடத்தி சென்றனர். பின்னர் அவரை கடத்தல்காரர்கள் அடித்து, உதைத்து தாக்கினார்கள்.
மேலும் ராமகிருஷ்ணாவை விடுவிக்க அவருடைய குடும்பத்தினரிடம் கடத்தல்காரர்கள் ரூ.1 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்தனர். இதுபற்றி சவுக் போலீசாருக்கு, ராமகிருஷ்ணாவின் குடும்பத்தினர் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, கடத்தல்காரர்களிடம் இருந்து ராமகிருஷ்ணாவை மீட்க சவுக் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிரேமட், ஆர்.ஜி.நகர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அக்கமகாதேவி தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் ராமகிருஷ்ணாவை கொள்ளையர்களான உமேசும், பாபுவும் கடத்தி இருப்பது தெரியவந்தது.
இந்த நிலையில், நேற்று அதிகாலையில் சவுக் அருகே உள்ள பூங்காவில் கொள்ளையர்களான உமேஷ் மற்றும் பாபு பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு சென்றனர். பின்னர் உமேஷ் மற்றும் பாபுவை சப்-இன்ஸ்பெக்டர் அக்கமகாதேவி, போலீஸ்காரர்கள் ராஜ்குமார், பிரகாஷ், நிங்கப்பா ஆகிய 4 பேரும் சேர்ந்து பிடிக்க முயன்றனர். அப்போது அவர்கள் 4 பேரையும் உமேசும், பாபுவும் ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றனர். இதில், 4 பேருக்கும் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, கொள்ளையர்கள் உமேஷ், பாபுவை நோக்கி இன்ஸ்பெக்டர் கிரேமட் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் 3 ரவுண்டு சுட்டார். இதில் உமேஷ், பாபுவின் காலில் தலா ஒரு குண்டு துளைத்ததால் அவர்கள் இருவரும் சுருண்டு விழுந்தனர். உடனே அவர்களை போலீசார் கைது செய்தார்கள். பின்னர் உமேஷ், பாபு ஆகியோரை மீட்டு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் போலீசார் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதுபோல, சப்-இன்ஸ்பெக்டர் அக்கமகாதேவி, போலீஸ்காரர்கள் ராஜ்குமார், பிரகாஷ், நிங்கப்பா ஆகியோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள்.
இதற்கிடையில், கடத்தப்பட்ட ராமகிருஷ்ணா மீட்கப்பட்டார். உமேசும், பாபுவும் தாக்கியதால் அவர் படுகாயம் அடைந்திருந்தார். தற்போது தனியார் மருத்துவமனையில் ராமகிருஷ்ணா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். முன்னதாக துப்பாக்கி சூடு நடந்த பகுதியை கலபுரகி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிகுமார் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அப்போது உமேஷ், பாபு ஆகியோர் கொள்ளையர்கள் என்பதும், அவர்கள் மீது 4 கொள்ளை வழக்குகள் இருப்பதும், பணத்திற்காக ராமகிருஷ்ணாவை கடத்தியதும் தெரியவந்தது.
இதுகுறித்து சவுக் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளையர்கள் 2 பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் கலபுரகியில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story