கால்வாயில் ஆட்டோ பாய்ந்து ஓய்வுபெற்ற ரெயில்வே அதிகாரி பலி
திருப்பரங்குன்றம் அருகே கால்வாயில் ஆட்டோ பாய்ந்ததில் ரெயில்வே அதிகாரி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருப்பரங்குன்றம்,
மதுரை திருநகர் ராமன் தெருவை சேர்ந்தவர் காசிமாயன் (வயது60). இவர் ரெயில்வே துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றார். மதுரையை சேர்ந்த வக்கீலிடம் சேர்ந்து பணியாற்றி வந்தார். வழக்கம்போல பணி முடித்து மதுரையில் இருந்து திருநகருக்கு ஒரு ஆட்டோவில் வந்தார். அதே பகுதியை சேர்ந்த டிரைவர் பாபு ஆட்டோவை ஓட்டினார்.
திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹார்விப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே நிலையூர்கால்வாய் அருகே சென்றபோது ஆட்டோ திடீரென்று நிலை தடுமாறி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. தாறுமாறாக ஓடிய ஆட்டோ கால்வாயில் பாய்ந்தது. இதில் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக டிரைவர் பாபு உயிர் தப்பினார்.
கால்வாயில் ஓடிய மழைநீரில் விழுந்த காசிமாயன் மாயமானார். அவருடைய கதி என்னவென்று தெரியாமல் இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த திருநகர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் காசிமாயனை தேடினர். ஆட்டோ எந்திரம் மூலம் மீட்கப்பட்டது.
இந்த நிலையில் காசிமாயன் உடல் கால்வாய் ஓரத்தில் மிதந்தது. அதை அறிந்த திருநகர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.