கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்; வாலிபர் கைது


கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்; வாலிபர் கைது
x
தினத்தந்தி 19 Oct 2018 11:15 PM GMT (Updated: 20 Oct 2018 4:00 PM GMT)

சொந்த ஊருக்கு செல்ல ரெயிலுக்கு நேரமாகி விட்டதால், ரெயில் புறப்படும் நேரத்தை தாமதப்படுத்துவதற்காக கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி,

சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று காலை ஒரு செல்போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், ‘‘சென்டிரலில் இருந்து கோவை செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது. இன்னும் சிறிதுநேரத்தில் அது வெடித்துவிடும்’’ என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

இதுபற்றி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரெயில்வே போலீசார், மிரட்டல் வந்த செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். அதில் மிரட்டல் விடுத்த நபர் சென்னை வடபழனி பகுதியில் இருப்பதாக செல்போன் கோபுர சிக்னல் காட்டியது.

இதையடுத்து வடபழனி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த செல்போன் வைத்து இருந்த நபரை பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர், வேலூரைச் சேர்ந்த பிரவீன்குமார் (வயது 25) என்பதும், கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு விடுதியில் தங்கி, மேற்கு மாம்பலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும் தெரிந்தது. அவர்தான் கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

போலீசாரிடம் பிரவீன்குமார் அளித்து உள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:–

சனி, ஞாயிறு 2 நாட்கள் விடுமுறை என்பதால் பெற்றோரை பார்க்க எனது சொந்த ஊருக்கு சென்டிரலில் இருந்து கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலில் செல்ல முடிவு செய்து இருந்தேன். ஆனால் நேற்று அதிகாலை எழுந்து பார்த்தபோது 5.30 மணி ஆகிவிட்டது.

சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 6 மணிக்கு கோவை எக்ஸ்பிரஸ் புறப்பட்டு விடும் என்பதால், எப்படியாவது ரெயிலை நிறுத்தி அதில் ஊருக்கு சென்று விடவேண்டும் என முடிவு செய்தேன்.

அந்த ரெயிலில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்தால் ரெயிலில் சோதனை நடத்துவார்கள். இதனால் ரெயில் புறப்படும் நேரம் தாமதமாகும். அதற்குள் நாம் அங்கு சென்று ரெயிலை பிடித்து விடலாம் என திட்டமிட்டேன்.

பின்னர் எனது செல்போனில் இருந்து சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து, கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்தேன். உடனடியாக எனது அறையில் இருந்து புறப்பட்டு கோடம்பாக்கம் ரெயில் நிலையத்துக்கு சென்று மின்சார ரெயிலில் சென்டிரல் ரெயில் நிலையம் செல்ல முயன்றேன்.

ஆனால் அதற்குள் எனது செல்போன் எண்ணை வைத்து, வடபழனி போலீசார் என்னை மடக்கி பிடித்து கைது செய்து விட்டனர்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

கைதான பிரவீன்குமாரை வடபழனி போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story