வேப்பூர் அருகே: தண்டவாளத்தை சேதப்படுத்தி ரெயிலை கவிழ்க்க சதியா? போலீசார் விசாரணை


வேப்பூர் அருகே: தண்டவாளத்தை சேதப்படுத்தி ரெயிலை கவிழ்க்க சதியா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 21 Oct 2018 3:00 AM IST (Updated: 21 Oct 2018 1:25 AM IST)
t-max-icont-min-icon

வேப்பூர் அருகே தண்டவாளத்தை சேதப்படுத்தி ரெயிலை கவிழ்க்க சதி நடந்துள்ளதாக தெரிகிறது. இது பற்றி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

வேப்பூர், 

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இருந்து சேலத்துக்கு நேற்று முன்தினம் மதியம் 2 மணி அளவில் பயணிகள் ரெயில் புறப்பட்டு சென்றது. அந்த ரெயில் மதியம் 2.20 மணியளவில், கூத்தக்குடி ரெயில் நிலையம் அருகே சென்று கொண்டு இருந்தது.

அப்போது தண்டவாளத்தில் நீண்ட வரிசையில் இரும்பு கம்பிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை ரெயில் என்ஜின் டிரைவர் பார்த்தார். உடனே அவர் சுதாரித்துக்கொண்டு ரெயிலின் வேகத்தை குறைத்து ரெயிலை நிறுத்தினார். டிரைவரின் சாமர்த்தியத்தால், சுமார் 200 மீட்டர் முன்னதாக ரெயில் நிறுத்தப்பட்டது.

இதன்பிறகு என்ஜின் டிரைவர் ரெயிலில் இருந்து கீழே இறங்கி சென்று பார்த்த போது தண்டவாளத்தில் நாசவேலை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தண்டவாளத்தை அடியில் உள்ள சிமெண்டு கட்டையுடன் இணைக்கும் 15-க்கும் மேற்பட்ட இரும்பு ‘கிளிப்’புகளை யாரோ உடைத்து தண்டவாளத்தின் மீது வைத்திருந்தனர்.

இது பற்றி அவர் கூத்தக்குடி ரெயில் நிலையத்துக்கும், ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார். உடனடியாக ரெயில்வே அதிகாரிகளும், ஊழியர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்டவாளத்தை சீரமைத்தனர். இதையடுத்து மாலை 4-20 மணி அளவில் அங்கிருந்து பயணிகள் ரெயில் சேலத்துக்கு புறப்பட்டு சென்றது.

இந்த சம்பவம் குறித்து சேலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தண்டவாளத்தில் நாசவேலை செய்த நபர்களை தேடி வருகிறார்கள். மர்ம ஆசாமிகள் ரெயிலை கவிழ்ப்பதற்காக நாசவேலையில் ஈடுபட்டார்களா? அல்லது குடிபோதையில் இந்த செயலில் ஈடுபட்டார்களா? என தெரியவில்லை. இதுபற்றி ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டுகள் சரவணன் (கடலூர்), ஜெயக்குமார் (விழுப்புரம்) ஆகியோரும் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story