குமரி மாவட்டத்தில் பலத்த மழை: திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை


குமரி மாவட்டத்தில் பலத்த மழை: திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
x
தினத்தந்தி 21 Oct 2018 4:30 AM IST (Updated: 21 Oct 2018 2:45 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நாகர்கோவில் மற்றும் குலசேகரம், திற்பரப்பு உள்ளிட்ட பகுதிகளில் நேற்றும் பலத்த மழை பெய்தது. அணை பகுதிகள் மற்றும் மலையோர பகுதிகளிலும் மழை கொட்டியது. மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெய்த இந்த மழை அதிகபட்சமாக நாகர்கோவிலில் 31.1 மில்லி மீட்டர் பதிவாகி இருந்தது.

இதேபோல் பேச்சிப்பாறை- 11.8, பூதப்பாண்டி- 2.4, கன்னிமார்- 2.2, பாலமோர்- 12.5, அடையாமடை- 16 என்ற அளவில் பெய்திருந்தது. நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் மொத்தம் 226.60 மில்லி மீட்டர் அளவில் மழை பெய்திருந்தது.

மழை காரணமாக ஆறுகள் மற்றும் கால்வாய்களில் அதிகளவு தண்ணீர் வருகிறது. மேலும் அணைகளுக்கும் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணைக்கு 476 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. இது போல பெருஞ்சாணி அணைக்கு 326 கனஅடி வீதமும், சிற்றார் 1 அணைக்கு 118 கனஅடி வீதமும், சிற்றார் 2 அணைக்கு 32 கனஅடி வீதமும் தண்ணீர் வந்தது.

அதே சமயம் பேச்சிப்பாறை அணையில் இருந்து 406 கனஅடி வீதமும், பெருஞ்சாணி அணையில் இருந்து 320 கனஅடி வீதமும், சிற்றார் 1 அணையில் இருந்து 100 கனஅடி வீதமும், மாம்பழத்துறையாறு அணையில் இருந்து 6 கனஅடி வீதமும் தண்ணீர் திறந்துவிடப்பட்டு இருக்கின்றது.

தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அருவியில் தண்ணீர் ஆக்ரோஷமாக கொட்டுவதால் அருவியில் குளிக்க சுற்றலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். எனினும் குளிப்பதற்காக ஆர்வமாக வந்த சுற்றுலா பயணிகள் அருவியின் அழகை தூரத்தில் இருந்து கண்டு ரசித்தனர். 

Next Story