கேரளாவுக்கு கடத்த முயன்ற குட்கா பொருட்கள் பறிமுதல்-3 பேரிடம் விசாரணை
கேரளாவுக்கு கடத்த முயன்ற குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேரிடம் விசாரணை நடைபெறுகிறது.
கோவை,
பெங்களூருவில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கோவைக்கு கடத்தி வரப்பட்டு, குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டு சப்ளை செய்யப்படுகிறது. மேலும் கோவை வழியாக கேரளாவுக்கும் கடத்தப்படுகிறது. கோவை தெற்கு பகுதி போலீஸ் உதவி கமிஷனர் ரமேஷ்கிருஷ்ணன் மற்றும் போத்தனூர் போலீசார் ஈச்சனாரி பகுதியில் நள்ளிரவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில், காரின் பின்சீட்டில் சிறு, சிறு மூட்டைகள் கிடந்தன. இது குறித்து அவர்களிடம் கேட்டபோது காரில் இருந்தவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்கள். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த மூட்டைகளை பிரித்து பார்த்த போது அதில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தன. அந்த மூட்டைகளில் 25 கிலோவுக்கும் மேல் இருந்த குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து காரில் இருந்த 3 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளியை சேர்ந்த சுதிர் (வயது 33), அனஸ்(22), ஆலுவாவை சேர்ந்த சித்திக் (23) என்பது தெரிய வந்தது. இவர்கள் பெங்களூருவில் இருந்து குட்கா பொருட் களை கேரளாவுக்கு கடத்தி செல்வதாக தெரிவித்த னர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், குட்கா பொருட்கள் பிடிபட்டது குறித்து உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளோம். அவர்களிடம், கைப்பற்றப்பட்ட குட்கா மூட்டைகளை ஒப்படைக்கப்படும். உணவு பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் என்றனர்.
Related Tags :
Next Story