செங்கோட்டை அருகே கார்-ஆட்டோ மோதல்; டிரைவர் பலி பெண் உள்பட 3 பேர் படுகாயம்


செங்கோட்டை அருகே கார்-ஆட்டோ மோதல்; டிரைவர் பலி பெண் உள்பட 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 21 Oct 2018 10:45 PM GMT (Updated: 2018-10-21T22:40:24+05:30)

செங்கோட்டை அருகே கார்-ஆட்டோ மோதியதில் டிரைவர் பலியானார். பெண் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள கட்டளைகுடியிருப்பை சேர்ந்தவர் மாடசாமி (வயது 44). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார்.

நேற்று காலை மாடசாமி அந்த பகுதியை சேர்ந்த ராஜா (52), முருகன் (42), நல்லம்மாள் (53) ஆகிய 3 பேரையும் தனது ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு, செங்கோட்டைக்கு சென்றார்.

ஆட்டோ செங்கோட்டை அருகே உள்ள பி.வி.டி. மில் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் வந்த கார் எதிர்பாராதவிதமாக ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ பலத்த சேதமடைந்தது.

இதில் ஆட்டோ டிரைவர் மாடசாமி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். ராஜா, முருகன், நல்லம்மாள் ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.

உடனே அருகில் இருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த புளியரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மாடசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, காரை ஓட்டி வந்த கேரளாவை சேர்ந்த ரவீந்திரன் (53) என்பவரை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story