வேடசந்தூர் அருகே விபத்து: வேன் கவிழ்ந்து சுற்றுலா பயணிகள் 15 பேர் படுகாயம்
வேடசந்தூர் அருகே வேன் கவிழ்ந்து சுற்றுலா பயணிகள் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
வேடசந்தூர்,
சேலத்தை சேர்ந்த 22 பேர், குற்றாலம், பாபநாசம், திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா சென்றனர். பின்னர் அவர்கள் ஊருக்கு திரும்பினர். வேனை சேலத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 40) என்பவர் ஓட்டினார். நேற்று அதிகாலை 4 மணி அளவில் வேடசந்தூர்-கரூர் 4 வழிச்சாலையில் கல்வார்பட்டியை கடந்து கணவாய்மேடு அருகே வேன் வந்து கொண்டிருந்தது.
அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரை தாண்டி மறுகரைக்கு சென்று கவிழ்ந்தது. நல்லவேளையாக அந்த சமயத்தில் வாகனங்கள் எதுவும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த விஷ்வபரிசாதம் (62), செல்வக்குமாரி (53), சுமதி (53), மதேஸ்வரன் (55), பாஸ்கர் (61), கல்யாணி (56), ஜெகதீசன் (55), இன்பசேகர் (66), அர்ச்சனா (52), மாணிக்கம் (38) உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
அந்த வழியாக வந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல், கரூரில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கூம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story