ராட்சத பள்ளம் தோண்டி பல மாதங்களாகியும் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி தொடங்காமல் முடக்கம் காவேரிப்பாக்கம் பேரூராட்சி பொதுமக்கள் குற்றச்சாட்டு
காவேரிப்பாக்கத்தில் தரைமட்ட குடிநீர் தொட்டி கட்ட பள்ளம் தோண்டி பல மாதங்களாகியும் பணிகள் தொடங்காமல் முடக்கம் அடைந்துள்ளது.
வேலூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள காவேரிப்பாக்கம், பேரூராட்சியாக உள்ளது. இங்கு 15 வார்டுகள் உள்ளன. இங்குள்ள பொதுமக்களுக்கு திருப்பாற்கடல் பாலாற்றில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அதிலிருந்து குடிநீர் எடுத்து வினியோகிக்கப்படுகிறது.
இதற்காக 13-வது வார்டு பகுதியான தேரடி தெருவில் கடந்த 1976-ம் ஆண்டு ரூ.9 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி கட்டப்பட்டது. திருப்பாற்கடல் பாலாற்றில் உள்ள ஆழ்துளை கிணற்றில் எடுக்கப்படும் தண்ணீர் இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றப்பட்டு அங்கிருந்து நேரடியாக பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் குடிநீர் வினியோகத்தை மேம்படுத்த, இந்த தொட்டியின் அருகே தரைமட்ட தொட்டி கட்டி அதில் தண்ணீரை தேக்கி உடனுக்குடன் மேல்நிலை தொட்டிக்கு ஏற்ற முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தரைமட்ட தொட்டி அமைக்க பெரிய அளவில் ராட்சத பள்ளம் தோண்டப்பட்டது.
ஆனால் பல மாதங்களாகியும் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் விபரீதங்கள் ஏற்படும் அபாயமும் உள்ளன. எனவே தரைமட்ட தொட்டி கட்டும் பணியை விரைந்து தொடங்கி முடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக காவேரிப்பாக்கம் பேரூராட்சி செயல் அலுவலர் முகமது ரிஸ்வானிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட தொட்டி அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டு பள்ளம் தோண்டப்பட்டது. இந்த பணிக்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே சிறிய ஜல்லிகளும், பெரிய ஜல்லிக்கற்களும் கொட்டப்பட்டு தயார்நிலையில் உள்ளது. ஆனால் மணல் தட்டுப்பாடு உள்ளதால் இந்த பணியை தொடங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
22-ந் தேதி (இன்று) இந்த பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டு விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story