கன்னிவாடி அருகே: துப்பாக்கியால் சுட்டு மான் வேட்டை - ரியல் எஸ்டேட் அதிபர்கள் உள்பட 3 பேர் கைது


கன்னிவாடி அருகே: துப்பாக்கியால் சுட்டு மான் வேட்டை - ரியல் எஸ்டேட் அதிபர்கள் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 22 Oct 2018 3:30 AM IST (Updated: 22 Oct 2018 12:28 AM IST)
t-max-icont-min-icon

கன்னிவாடி அருகே துப்பாக்கியால் சுட்டு மானை வேட்டையாடிய ரியல் எஸ்டேட் அதிபர்கள் உள்பட 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

கன்னிவாடி, 


திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள ஆடலூர் மலை பகுதியில் நேற்று முன்தினம் இரவு வனவர் சாமியப்பன் தலைமையிலான வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியில் 4 பேர் சமைத்து கொண்டு இருந்தனர். வனத்துறையினரை பார்த்ததும் அவர்கள் தப்பியோட முயன்றனர். அதில் 3 பேரை வனத்துறையினர் விரட்டி பிடித்தனர். மற்றொருவர் தப்பியோடி விட்டார்.

பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் ஆடலூரை சேர்ந்த விவசாயி செந்தில்குமார் (வயது 42), திருச்சி தில்லைநகரை சேர்ந்த பாலாஜி (38), லால்குடியை சேர்ந்த சரவணன் (49) ஆகியோர் என்பதும், தப்பியோடியது ஆடலூரை சேர்ந்த ஆனந்த் (41) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர் செந்தில்குமார், பாலாஜி, சரவணன் ஆகியோரை கைது செய்தனர்.

ஆனந்த் திருச்சியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றினார். அப்போது வங்கிக்கு வந்த ரியல் எஸ்டேட் அதிபர்களான பாலாஜி மற்றும் சரவணன் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே ஆனந்த் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஆடலூருக்கு வந்துவிட்டார்.

இந்தநிலையில் பாலாஜி, சரவணன் ஆகியோர் திருச்சியில் இருந்து திண்டுக்கல்லுக்கு வந்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு ஆனந்த், செந்தில்குமார் ஆகியோருடன் சேர்ந்து அவர்கள் ஆடலூர் வனப்பகுதிக்கு வேட்டைக்கு சென்றனர். வேட்டையாடுவதற்காக அவர்கள் 2 துப்பாக்கிகளை கொண்டு சென்றுள்ளனர். இதையடுத்து ஒரு மானை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடி, அதன் இறைச்சியை சமைத்தபோது வனத்துறையினரிடம் சிக்கியுள்ளனர்.

பிடிபட்ட 3 பேரிடம் இருந்தும் 4 கிலோ மான் இறைச்சி, சமையலுக்கு பயன்படுத்திய பாத்திரங்கள் மற்றும் ஒரு துப்பாக்கி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால் மானின் உடல் மற்றும் வேட்டையாட பயன்படுத்திய துப்பாக்கி ஆகியவை வனத்துறையினரிடம் சிக்கவில்லை. இதையடுத்து கன்னிவாடி வனச்சரகர் தெய்வசர்மா தலைமையில் வனவர் தண்டபாணி, வனக்காப்பாளர்கள் பீட்டர், சங்கர், வேல்முருகன் ஆகியோரை கொண்ட தனிப்படையினர் வனப்பகுதிக்கு விரைந்தனர்.

மேலும் பிடிபட்ட 3 பேரையும் சம்பவம் நடந்த இடத்துக்கு அழைத்து சென்று வனத்துறையினர் விசாரணை நடத்தினர். ஆனால் மானை வேட்டையாட பயன்படுத்திய துப்பாக்கி ஆனந்திடம் உள்ளது என்றும், அவர் தான் மானின் உடலை எடுத்து சென்றதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே ஆனந்தை பிடித்தால் தான் மானின் உடல் மற்றும் துப்பாக்கியை கைப்பற்ற முடியும். தப்பியோடிய ஆனந்தை வனத்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.      

Next Story