தஞ்சை- திருவாரூர் கோவில்களில் தொல்லியல் துறையினர் ஆய்வு விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய முடிவு


தஞ்சை- திருவாரூர் கோவில்களில் தொல்லியல் துறையினர் ஆய்வு விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய முடிவு
x
தினத்தந்தி 21 Oct 2018 11:15 PM GMT (Updated: 21 Oct 2018 7:14 PM GMT)

தஞ்சை பெரியகோவில், திருவாரூர் கோவிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், தொல்லியல் துறை அதிகாரிகள் சிலைகளை ஆய்வு செய்தனர். இது தொடர்பாக அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று தொல்லியல் துறை மண்டல கூடுதல் இயக்குனர் நம்பிராஜன் கூறினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவில் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்து வருகிறது. இந்த கோவிலில் இருந்து மாயமான ராஜராஜசோழன் மற்றும் அவரது பட்டத்து இளவரசியான லோகமாதேவி ஆகியோரின் சிலைகள் குஜராத் அருங்காட்சியகத்தில் இருந்து மீட்டுக்கொண்டு வரப்பட்டன. இந்த சிலைகள் தஞ்சை பெரியகோவிலில் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தஞ்சை பெரிய கோவிலில் உள்ள பழமையான ஐம்பொன்சிலைகள் மாற்றப்பட்டுள்ளன என புகார்கள் எழுந்தன. இதைத்தொடர்ந்து கோவிலில் உள்ள 41 ஐம்பொன் சிலைகளின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்ய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் முடிவு செய்தனர்.

இது தொடர்பான ஆவணங்களை இந்திய தொல்லியல் துறைக்கு அறிக்கையாக அனுப்பினர். இதன்பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் சிலைகளை ஆய்வு செய்தனர். அப்போது சில சிலைகளில் தமிழ் மொழியில் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளது. எனவே சிலைகள் மாற்றப்பட்டு இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது என்று தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து தொல்லியல்துறையுடன் இணைந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 11-ந்தேதி ஆய்வு செய்தனர். அப்போது பழைய ஆவணங்களில் உள்ளபடி சிலைகள் எடை மற்றும் உயரம் ஆகியவை சரியாக உள்ளதா? என்று ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின் போது சிலைகள் மாற்றப்பட்டு இருப்பதற்கான முகாந்திரம் உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

நேற்று முன்தினம் தஞ்சை பெரியகோவிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமன் தலைமையில் 45 பேர் கொண்ட குழுவினரும், இந்திய தொல்லியல் துறை தென் மண்டல இயக்குனர் நம்பிராஜன் தலைமையில் 15 பேர் கொண்ட குழுவினரும் பெரிய கோவிலில் இருந்த சிலைகளை எடுத்து வந்து முருகன் சன்னதி முன்பு உள்ள ராஜா மண்டபத்தில் வைத்து ஆய்வு செய்தனர்.

நவீன கருவிகள் மூலம் 6½ மணி நேரம் இந்த ஆய்வு நடைபெற்றது. மொத்தம் உள்ள 41 சிலைகளில் 38 சிலைகள் ஆய்வு செய்யப்பட்டன. மீதமுள்ள 3 சிலைகளை நேற்று 2-வது நாளாக சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமன் தலைமையில் 25-க்கும் மேற்பட்டோர் தஞ்சை பெரிய கோவிலுக்கு காலை 7 மணிக்கு வந்தனர். இவர்களை தொடர்ந்து இந்திய தொல்லியல் துறை தென் மண்டல இயக்குனர் நம்பிராஜன் தலைமையில் தொல்லியல் துறையினரும் வந்தனர்.

தஞ்சை பெரிய கோவில் சிலைகள் பாதுகாப்பு மையத்தில் இருந்து சிலைகளை எடுத்து அங்கேயே வைத்து ஆய்வு செய்தனர்.

காலை 9 மணி வரை இந்த ஆய்வுகள் நடைபெற்றது. அடுத்த கட்டமாக இந்த சிலைகள் அனைத்தும் பெங்களூருவுக்கு எடுத்து செல்லப்பட்டு ஆய்வுகள் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

ஆய்வுக்கு பின் வெளியே வந்த இந்திய தொல்லியல் துறை தென்மண்டல இயக்குனர் நம்பிராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

“தஞ்சை பெரிய கோவில், புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் ஆகிய இரண்டு இடங்களில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் உதவியுடன் அதி நவீன கருவிகளை கொண்டு சிலைகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பெரியகோவிலில் 41 சிலைகள், மாரியம்மன்கோவிலில் 19 சிலைகள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வுகளின் அறிக்கை விரைவில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் தாக்கல் செய்யப்படும். இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் மேலும் கூடுதல் தகவல்களை தெரிவிக்க இயலாது. இவ்வாறு அவர் கூறினார்.

தஞ்சை பெரிய கோவிலில் ஆய்வு செய்து விட்டு அவர்கள் திருவாரூர் சென்றனர். திருவாரூரில் பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோவில் மேற்கு கோபுரவாசல் பகுதியில் உலோக திருமேனி பாதுகாப்பு மையம் என்கிற சிலைகள் பாதுகாப்பு மையம் உள்ளது. இந்த மையத்தில் திருவாரூர் மட்டுமின்றி அருகே உள்ள மாவட்டங்களில் உள்ள 625 கோவில்களை சேர்ந்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஐம்பொன் மற்றும் உலோக சாமி சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சிலை பாதுகாப்பு மையத்தில் கண்காணிப்பு கேமரா, சுழற்சி முறையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பந்தபட்ட கோவில்களில் விழாக்கள் நடைபெறும்போது போலீஸ் பாதுகாப்புடன் சிலைகள் எடுத்து செல்லப்பட்டு உற்சவம் முடிந்தவுடன் மீண்டும் சிலை பாதுகாப்பு மையத்தில் கொண்டு வந்து வைக்கப்படும்.

இந்நிலையில் ஏற்கனவே கடந்த 16-ந் தேதி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையில், திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள சிலை பாதுகாப்பு மையத்தை ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து நேற்று திருவாரூர் தியாகராஜர் கோவில் சிலைகள் பாதுகாப்பு மையத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் தொல்லியல் துறையினர் காலை 11 மணி முதல் தொடங்கி ஆய்வு செய்து வருகின்றனர்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமன், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

உலோக சிலைகளின் தொன்மை தன்மை குறித்து தொல்லியல் துறையின் தென்மண்டல இயக்குனர் நம்பிராஜன் தலைமையில், குழுவினர் ஆய்வு செய்தனர். இதில் உலோக சிலைகள் மட்டுமே ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. கற்சிலைகள் ஆய்விற்கு உட்படுத்தப்படவில்லை. நீதிமன்ற உத்தரவுபடி இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

இங்கு 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட சிலைகள் இருப்பதாக தகவல் கிடைத்ததின் பேரில் இந்த ஆய்வு நடைபெறுகிறது. இந்த ஆய்வில் என்னென்ன சிலைகள் உள்ளன. அவை எந்தந்த கோவிலுக்கு உரியவை, முறையாக பராமரிக்கப்படுகிறதா? அதன் எடை, உலோகங்களின் உண்மை தன்மை போன்றவற்றை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வு இன்னும் ஒரு சில நாட்கள் நீடிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story