காரைக்காலில் இருந்து கடத்தி வந்த 330 லிட்டர் சாராயம் பறிமுதல் 3 பேர் கைது


காரைக்காலில் இருந்து கடத்தி வந்த 330 லிட்டர் சாராயம் பறிமுதல் 3 பேர் கைது
x
தினத்தந்தி 21 Oct 2018 10:15 PM GMT (Updated: 21 Oct 2018 7:29 PM GMT)

நாகூர் அருகே காரைக்காலில் இருந்து கடத்தி வந்த 330 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேரை கைது செய்தனர்.

நாகூர்,

நாகை மாவட்டத்தில் மது விற்பனையை தடுக்க நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரிலும், உதவி போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் அறிவுறுத்தலின் படியும் நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். முட்டம் பஸ் நிறுத்தம் அருகே சந்தேகபடும்படி மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது புதுச்சேரி சாராயத்தை ஒரு சாக்கு பையில் வைத்து இருந்தது தெரிய வந்தது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் அந்த நபர் நாகூர் வண்டிபேட்டையை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ரமேஷ் (வயது 26) என்பதும், காரைக்கால் பகுதியில் இருந்து 110 லிட்டர் சாராயம் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேசை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன் படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் பனங்குடி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த நாகூர் வண்டிபேட்டையை சேர்ந்த சுந்தரராஜன் மகன் சிவா (29) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் காரைக் காலில் இருந்து சாராயம் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து சிவாவை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

நாகூர் வெட்டாற்று பாலம் அருகே மேல வாஞ்சூரை சேர்ந்த ராமன் மகன் மணிகண்டன் (21) என்பவர் காரைக்காலில் இருந்து சாக்கு பையில் கடத்தி வந்த 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும், இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

Next Story