நாகையில் டாக்டர் வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகை திருட்டு 6 சிறுவர்கள் உள்பட 7 பேர் கைது


நாகையில் டாக்டர் வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகை திருட்டு 6 சிறுவர்கள் உள்பட 7 பேர் கைது
x
தினத்தந்தி 21 Oct 2018 10:15 PM GMT (Updated: 21 Oct 2018 7:33 PM GMT)

நாகையில் டாக்டர் வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகைகளை திருடி சென்ற 6 சிறுவர்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகப்பட்டினம்,

நாகை ராமநாயக்கன் குளத்தெருவை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி. இவர்கள் இருவரும் டாக்டர்கள்.

ராமசாமி வீடு பழுது ஏற்பட்டுள்ளதால் அதனை பூட்டிவிட்டு சுப்பையா முதலியார் தெருவில் வாடகை வீட்டில் கடந்த 4 மாதங்களாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று ராமநாயக்கன் குளத்தெருவில் உள்ள தனது வீட்டிற்கு தமிழ்ச்செல்வி வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டிற்குள் சென்று பீரோவை பார்த்த போது அதில் இருந்த 10 பவுன் நகைகள் திருட்டு போயிருந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த வெளிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் தமிழ்ச்செல்வி வீடு பூட்டி கிடப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 10 பவுன் நகைகளை திருடி சென்றது தெரிய வந்தது. மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வந்து திருட்டு நடந்த வீட்டில் இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

இதுதொடர்பாக தமிழ்ச்செல்வி வெளிப்பாளையம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில் நகைகளை திருடியவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வந்தனர்.

தொடர்ந்து திருட்டு நடந்த வீட்டில் அருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் தமிழ்ச்செல்வின் வீட்டின் கதவை உடைத்து 7 பேர் உள்ளே புகுந்தது கேமராவில் பதிவாகி இருந்தது. இதை தொடர்ந்து நகைகளை திருடியது தொடர்பாக வெளிப்பாளையம் காடம்பாடி சவேரியார் கோவில் தெருவை சேர்ந்த லூர்துசாமி மகன் எடிசன் (வயது22) மற்றும் 6 சிறுவர்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் தமிழ்ச்செல்வி வீட்டில் நகைகளை திருடியதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். மேலும், அவர்களிடம் இருந்து நகைகளை பறிமுதல் செய்தனர்.

Next Story