தற்போதைய அரசியல் சதுரங்க விளையாட்டை கணிக்க முடியாது தமிமுன் அன்சாரி பேட்டி


தற்போதைய அரசியல் சதுரங்க விளையாட்டை கணிக்க முடியாது தமிமுன் அன்சாரி பேட்டி
x
தினத்தந்தி 22 Oct 2018 4:30 AM IST (Updated: 22 Oct 2018 1:31 AM IST)
t-max-icont-min-icon

தற்போதைய அரசியல் சதுரங்க விளையாட்டை கணிக்க முடியாது என்று புதுக்கோட்டையில் தமிமுன் அன்சாரி பேட்டி அளித்தார்.

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான தமிமுன் அன்சாரி புதுக்கோட்டையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் தற்போது பருவமழை தொடங்கி விட்டதால், தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் 2-வது கட்ட தூர் வாரும் பணிகளை ஆறுகள் மற்றும் ஏரிகளில் செய்ய வேண்டும். சபரிமலை விவகாரத்தில் இந்து மக்கள் மற்றும் இந்து மதத் தலைவர்களின் கருத்துக்களை தான் நடைமுறைப்படுத்த வேண்டும். சபரிமலை கோவிலுக்குள் உள்ளே நுழைய முயன்ற சமூக ஆர்வலர் ரெஹானாவிற்கும் முஸ்லிம் மதத்திற்கும் சம்பந்தம் கிடையாது. அவர் 2016-ம் ஆண்டு மதமாற்றம் ஆகிவிட்டார்.

மனிதநேய ஜனநாயக கட்சி தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை. அரசு நல்லது செய்தால் வரவேற்போம். குறைகளை சுட்டி காட்டுவோம். தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இறப்பிற்கு பிறகு அரசியலில் தொய்வு இருந்தது உண்மை. எடப்பாடி அரசு 6 மாதத்திற்குள் கவிழ்ந்து அனைவரும் நினைத்தது போன்று எனது எம்.எல்.ஏ பதவியும் போய்விடும் என நானும் நினைத்தேன். ஆனால் அதையெல்லாம் முறியடித்து அ.தி.மு.க அரசு நீடித்து வருகிறது.

சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் நான் கோரும் கோரிக்கைகள் 90 சதவீதம் அரசால் நிறைவேற்றப்பட்டு வருகிறது. காமராஜர் ஆட்சிக்கு பிறகு நடைபெற்ற அனைத்து ஆட்சியிலும் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகிறது. எந்த ஆட்சியாக இருந்தாலும் மக்கள் வரி பணத்தில் தான் சாலை பணிகள் உள்பட அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது. எனவே எந்த அரசு வந்தாலும் அதை நினைவில் வைத்து கொண்டு பணிகளை செய்ய வேண்டும். தற்போது நடைபெற்று வரும் அரசியல் சதுரங்க விளையாட்டில் நாளை என்ன நடக்கும் என்பதை கணிக்க முடியாத சூழ்நிலை உள்ளது.

எம்.எல்.ஏ கருணாஸ் கூறிய கருத்துக்கள் ஏற்புடையது அல்ல. ஆனால் அவர் மன்னிப்பு கேட்டும் நட வடிக்கை எடுத்த தமிழக அரசு, எச்.ராஜா மற்றும் எஸ்.வி சேகர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. வன்முறையை தூண்டும் வகையில் யார் கருத்து தெரிவித்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம் என்பது அனைவருக்கும் சமம். மீடூ விவகாரத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் வெளிவருவது என்பது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் அதன் உண்மை தன்மையை நிரூபிக்க வேண்டும். இந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க கண்டிப்பாக வெற்றி பெற போவது கிடையாது. மனிதநேய ஜனநாயக கட்சி யாருடன் கூட்டணி என்பதை அந்த நேரத்தில்தான் முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story