சுடுகாட்டில் குப்பைக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு: நகராட்சி அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகை


சுடுகாட்டில் குப்பைக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு: நகராட்சி அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 21 Oct 2018 11:00 PM GMT (Updated: 21 Oct 2018 8:09 PM GMT)

கோபியில் உள்ள சுடுகாட்டில் குப்பைக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடத்தூர்,

கோபி கரட்டூரில் நகராட்சிக்கு சொந்தமான 3 ஏக்கர் பரப்பளவில் சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டில் அந்தப்பகுதி மக்கள் இறந்தவர்களை எரித்தும், புதைத்தும் வந்தனர். இந்தநிலையில் அந்த சுடுகாடு பகுதியில் குப்பைக்கிடங்கு அமைத்து உரம் தயாரிக்க கோபி நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

அதன்படி நேற்று மதியம் 12.30 மணி அளவில் நகராட்சி பொறியாளர் பார்த்திபன் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று குப்பைக்கிடங்கு அமைப்பதற்காக இடத்தை பார்வையிட்டனர். இதைத்தொடர்ந்து அங்கு கிடங்கு தோண்டுவதற்காக பொக்லைன் எந்திரமும் வந்தது. இதுகுறித்த தகவல் அந்தப்பகுதியில் வேகமாக பரவியது.

இதனால் பொதுமக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் குப்பைக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்டதோடு, பொக்லைன் எந்திரத்தையும் சிறைபிடித்தனர். மேலும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கோபி கரட்டூர் பகுதி மக்களுக்காக நகராட்சி சார்பில் சுடுகாடு அமைக்கப்பட்டது. இந்த சுடுகாட்டில் தற்போது குப்பைக்கிடங்கு அமைத்து உரம் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இங்கு குப்பைக்கிடங்கு அமைக்கப்பட்டதால் கரட்டூர், பச்சமலை, ஜே.ஜே.நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு, பல்வேறு தொற்று நோய்களும் பரவும்.

இதேபோல் குப்பைகளுக்கு தீ வைக்கப்பட்டால் பெரும் புகை மண்டலமாக காட்சி அளிக்கும். மேலும், இறந்தவர்களின் உடல்களை புதைப்பதில் சிரமம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே சுடுகாடு பகுதியில் குப்பைக்கிடங்கு அமைக்கக்கூடாது என்றனர்.

அதற்கு அதிகாரிகள் உயர் அதிகாரிகளிடம் பேசி இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதைத்தொடர்ந்து மதியம் 1 மணி அளவில் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டதோடு, சிறைபிடிக்கப்பட்ட பொக்லைன் எந்திரத்தையும் விடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story