சந்தேகப்படும்படி ஆட்கள் நடமாட்டம் இருந்தால் போலீசாருக்கு தெரிவியுங்கள் - போலீஸ் சூப்பிரண்டு வேண்டுகோள்


சந்தேகப்படும்படி ஆட்கள் நடமாட்டம் இருந்தால் போலீசாருக்கு தெரிவியுங்கள் - போலீஸ் சூப்பிரண்டு வேண்டுகோள்
x
தினத்தந்தி 22 Oct 2018 4:00 AM IST (Updated: 22 Oct 2018 1:39 AM IST)
t-max-icont-min-icon

சந்தேகப்படும்படி ஆட்கள் நடமாட்டம் இருந்தால் போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

அம்மாபேட்டை,

கிராமப்புற மக்களுக்கான சமுதாய விழிப்புணர்வு திட்டம் குறித்த முகாம் அம்மாபேட்டை அருகே தொப்பபாளையம் செல்லாயூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிக்கூடத்தில் நடைபெற்றது. ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடக்கும் குற்றச்செயல்களை தடுக்கும் விதமாக ஊருக்கு ஒரு போலீஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தொடர்பு எண்ணை பெற்றுக்கொண்டு தங்கள் பகுதி விதிமீறல் மற்றும் பொது பிரச்சினைகள் குறித்து புகார் கூறலாம். அதன்படி அந்த புகார்களுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். சட்டம்–ஒழுங்கு பிரச்சினை நடைபெறாமல் இருக்க பொதுமக்களாகிய நீங்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்.

மேலும் பொதுமக்கள் தங்கள் குறைகளை கூற ‘காவலன் எஸ்.ஓ.எஸ்’ என்று அறிமுகப்படுத்தியுள்ள செயலியை பயன்படுத்தலாம். அதில் தங்கள் இருப்பிடம், புகைப்படம் போன்றவற்றை பதிவு செய்து புகார் செய்தால் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனவே பொதுமக்கள் போலீஸ்– பொதுமக்கள் நல்லுணர்வு குறித்த விழிப்புணர்வு பெறவேண்டும். எனவே மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு போலீஸ் நிலைய உட்கோட்டத்திலும் ஒரு பகுதியை தேர்வு செய்து இத்திட்டத்தை அறிமுகப்படுத்தி வருகிறோம்.

பொதுமக்கள் தங்கள் பகுதியில் சந்தேகப்படும்படி வகையில் மர்மநபர்களின் நடமாட்டம் மற்றும் விதிமீறல் சம்பவங்களை தயக்கமின்றி போலீசாரிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story