கோவை அருகே: குடியிருப்புக்குள் நுழைந்து காட்டுயானை அட்டகாசம் - பாத்திரங்களை சூறையாடியதால் பரபரப்பு
கோவை அருகே குடியிருப்புக்குள் நுழைந்த காட்டு யானை விவசாய பயிர்களை சேதப்படுத்தியதுடன், வீட்டில் வைத்திருந்த பாத்திரங்களையும் சூறையாடியது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
துடியலூர்,
கோவை மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் உள்ளன. இந்த யானைகள் அவ்வப்போது பொன்னூத்து மலை, ஆனைகட்டி, அனுவாவி சுப்பிரமணியசாமி கோவில் பகுதி வழியாக ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன.
கடந்த 1 வாரமாக பொன்னூத்து மலையில் இருந்து இறங்கி வரும் காட்டு யானை ஒன்று வரப்பாளையம், தாளியூர், பாப்பநாயக்கன்பாளையம் ஆகிய இடங்களில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து வாழை மற்றும் விவசாய பயிர்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தியது.
நேற்று அதிகாலை தாளியூர் பகுதியில் உள்ள குடியிருப்புக்குள் நுழைந்த அந்த யானை ராஜகோபால், செல்வராஜ் ஆகியோரது தோட்டத்திற்குள் புகுந்து அங்கிருந்த வாழைகளை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தியது. பின்னர் நடராஜன் என்பவரது தோட்டத்திற்குள் புகுந்த யானை அங்கிருந்த பயிர்களையும் சேதப்படுத்தியது. அவரது வீட்டு வளாகத்துக்குள்ளும் புகுந்து துதிக்கையால் வீட்டில் வைத்திருந்த பாத்திரங்களை சூறையாடியது. குடும்பத்துடன் தூங்கிக்கொண்டு இருந்த நடராஜன் சத்தம்கேட்டு விழித்து பார்த்தபோது வீட்டு வளாகத்துக்குள் யானை நிற்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். யானையை பார்த்த குடும்பத்தினர் வீட்டுக்குள் பதுங்கிக்கொண்டனர். அந்த யானை வீட்டு சுவற்றை இடித்தது. 1 மணி நேர அட்டகாசத்திற்கு பின்னர் வனப்பகுதிக்குள் யானை திரும்பி சென்றது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து விவசாயிகள் கூறும்போது, ‘கடந்த 1 வாரமாக காட்டு யானை ஒன்று அட்டகாசம் செய்து வருகிறது. வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. வனத்துறையின் அலட்சியத்தால் கடுமையாக உழைத்து வளர்த்த விவசாய பயிர்களை இழந்து வருகிறோம்’ என்று தெரிவித்தனர்.
Related Tags :
Next Story