மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கி தருவதாக ரூ.50 லட்சம் மோசடி - 2 பேர் மீது வழக்கு


மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கி தருவதாக ரூ.50 லட்சம் மோசடி - 2 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 22 Oct 2018 3:15 AM IST (Updated: 22 Oct 2018 1:41 AM IST)
t-max-icont-min-icon

மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கி தருவதாக ரூ.50 லட்சம் மோசடி செய்த 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கோவை,

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் அழகேசன். தனியார் நிறுவன ஊழியர். இவருடைய மகன் கடந்த 2016-ம் ஆண்டு பிளஸ்-2 படித்து முடித்தார். அவரை எம்.பி.பி.எஸ். படிக்க வைக்க விரும்பிய அழகேசன் இது தொடர்பாக பலரிடம் பேசினார். அப்போது ஈரோடு மாவட்டம் திண்டல் பகுதியை சேர்ந்த சஞ்சீவ்குமார் (வயது 44) என்பவர் அறிமுகம் ஆனார்.

அவர், அழகேசனின் மகனுக்கு கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். சீட்டு வாங்கித்தருவதாகவும். அந்த கல்லூரியில் திம்மையா என்பவரை தனக்கு தெரியும் என்றும், எம்.பி.பி.எஸ். சீட்டு வாங்க ரூ.25 லட்சம் செலவாகும் என்றும் கூறியுள்ளார்.

இதை நம்பிய அழகேசன், சஞ்சீவ்குமார் மற்றும் திம்மையா ஆகியோரின் வங்கி கணக்கிற்கு கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வங்கியில் இருந்து பல தவணைகளில் ரூ.25 லட்சம் செலுத்தினார். குறிப்பிட்ட காலம் கடந்தும் அவருடைய மகனுக்கு எம்.பி.பி.எஸ். சீட் வாங்கித்தர வில்லை. இது பற்றி அழகேசன் கேட்டும் அவர்கள் உரிய பதில் அளிக்க வில்லை என்று தெரிகிறது.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அழகேசன், கர்நாடக மாநிலம் உல்லால் போலீசில் புகார் செய் தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள வங்கியில் இருந்து பணம் செலுத்தியதால் இந்த வழக்கு கோவை மாநகர குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.

விசாரணையில், சஞ்சீவ்குமார், திம்மையா ஆகிய 2 பேரும், ஊட்டியை சேர்ந்த நந்தா விஜயன் (55) என்பவரது மகனுக்கு எம்.பி.பி.எஸ். சீட்டு வாங்கித்தருவாக கூறியும் ரூ.25 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது.

கோவை மற்றும் ஊட்டியை சேர்ந்தவர்களிடம் மொத்தம் ரூ.50 லட்சம் மோசடி செய்தது குறித்து சஞ்சீவ்குமார், திம்மையா ஆகிய 2 பேர் மீது கோவை நகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சஞ்சீவ்குமார், திம்மையா ஆகியோரை கர்நாடக மாநில போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். அவர்கள் தற்போது ஜாமீனில் உள்ளனர். எனவே அவர்கள் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்த கோவை நகர குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Next Story