ஆன்லைன் வர்த்தகத்தை கண்டித்து வியாபாரிகள் பிரசாரம்


ஆன்லைன் வர்த்தகத்தை கண்டித்து வியாபாரிகள் பிரசாரம்
x
தினத்தந்தி 22 Oct 2018 5:00 AM IST (Updated: 22 Oct 2018 1:53 AM IST)
t-max-icont-min-icon

ஆன்லைன் வர்த்தகத்தை கண்டித்து வியாபாரிகள் வாகன பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

அரியாங்குப்பம்,

ஆன்லைன் வர்த்தகத்தை கண்டித்தும், மூத்த வணிகர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தியும், ஜி.எஸ்.டி.யில் உள்ள நடைமுறை சிக்கல்களை களைய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வணிகர் சம்மேளனத்தினர் வாகன பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த மாதம் டெல்லியில் தொடங்கிய வாகன பிரசாரம் 28 மாநிலங்களுக்கு சென்று வருகிற டிசம்பர் 16–ந்தேதி மீண்டும் டெல்லியில் நிறைவடைகிறது. இந்த வாகன பிரசாரம் நேற்று புதுவை மாநிலம் எல்லையான கன்னியக்கோவில் அருகே உள்ள முள்ளோடைக்கு வந்தது. வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைதொடர்ந்து தவளக்குப்பம் வழியாக அரியாங்குப்பம் பிரம்மன் சதுக்க அரங்கில் வந்து வாகன பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

இந்த பிரசாரத்திற்கு புதுவை வணிக கூட்டமைப்பு தலைவர் சிவசங்கர் தலைமை தாங்கி உரையாற்றினார். பொதுச்செயலாளர் பாலு நோக்கவுரையாற்றினார். அகில இந்திய வணிக சம்மேளனத்தின் நிர்வாகிகள் அமர்சிங்கரியா, வீரேந்திரசிங் ஆகியோர் ஆன்லைன் வியாபாரத்தால் சிறிய வியாபாரிகள் பாதிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டினார்கள். மேலும் மூத்த வணிகர்களுக்கு மத்திய அரசு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதில் அரியாங்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் ராமச்சந்திரன், செயலாளர் சந்துரு, துணை செயலாளர் காசிநாதன் உள்பட வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து வாகன பிரசாரம் எல்லைபிள்ளைச்சாவடி வழியாக விழுப்புரத்திற்கு சென்றது.


Next Story