விடுமுறையையொட்டி கொல்லிமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்தனர்


விடுமுறையையொட்டி கொல்லிமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்தனர்
x
தினத்தந்தி 21 Oct 2018 10:30 PM GMT (Updated: 21 Oct 2018 9:15 PM GMT)

விடுமுறையையொட்டி கொல்லிமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்தனர்.

சேந்தமங்கலம்,

நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலமாக கொல்லிமலை விளங்குகிறது. இந்த மலையை சுற்றி பார்க்க சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. அவர்கள் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளித்து செல்கின்றனர்.

இந்தநிலையில் ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் தொடர் விடுமுறை என்பதால் கொல்லிமலைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அதன்படி நேற்று விடுமுறையையொட்டி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் கொல்லிமலையில் குவிந்தனர். அவர்கள் நம் அருவி, மாசிலா அருவி, எட்டுக்கை அம்மன் கோவில், வாசலூர்பட்டி படகு சவாரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று சுற்றி பார்த்தனர். பின்னர் சுற்றுலா பயணிகள் வரலாற்று சிறப்புமிக்க அரப்பளஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

அதைத்தொடர்ந்து அவர்கள் கோவில் அருகில் சுமார் 300 அடி உயரத்தில் இருந்து வெள்ளியை உருக்கி விட்டது போல் பாயும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு சென்று உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். தற்போது பருவமழை பெய்து வருவதால் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் கொட்டுகிற வெள்ளநீர் ரம்மியமாக காட்சி அளிக்கிறது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். நீர்வீழ்ச்சியில் குளிக்க சுற்றுலா பயணிகள் குவிந்ததால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

Next Story