திருப்பூரில் விளையாட்டு வினையானது: கத்திரிக்கோல் நெஞ்சில் குத்தியதில் சிறுவன் சாவு, அண்ணன் கைது
திருப்பூரில் கத்திரிக்கோலை கையில் வைத்து சுற்றி விளையாடியபோது தவறி விழுந்ததில் சிறுவனின் நெஞ்சில் குத்தியதில் பரிதாபமாக இறந்தான். இதைத்தொடர்ந்து அவனுடைய அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்,
விளையாட்டு வினையாகி போன சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
சேலம் மாவட்டம் ஆத்தூர் கீரிப்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் அவனுடைய 16 வயது தம்பி ஆகியோர் திருப்பூர் கல்லம்பாளையத்தில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தனர். கடந்த 20–ந் தேதி மாலை சகோதரர்கள் இருவரும் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது 17 வயது சிறுவன் கத்திரிக்கோலை எடுத்து தனது கைகளில் வைத்து சுற்றி விளையாடிக்கொண்டிருந்துள்ளான். அவனுடைய தம்பியும் அருகில் நின்றுள்ளான். அப்போது எதிர்பாராதவிதமாக கத்திரிக்கோல் கைநழுவி பறந்து சென்று அவனுடைய தம்பியின் நெஞ்சுப்பகுதியில் பலமாக குத்தியது. இதில் அந்த சிறுவனுக்கு ரத்தகாயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் காயம்பட்ட சிறுவனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சைக்கு பின்னர் சிறுவன் தனது அறைக்கு திரும்பினான்.
இந்த நிலையில் அன்று இரவில் அந்த சிறுவனுக்கு மீண்டும் வலி ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிறுவனை சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக இறந்தான். இதைப்பார்த்து அந்த சிறுவனின் அண்ணன் கதறி துடித்தான். விளையாட்டு வினையாகி போய் தனது தம்பியின் உயிரை பறித்து விட்டதே என்று அந்த சிறுவன் புலம்பி தவித்தான்.
இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார், விபத்தால் உயிரிழப்பு என வழக்குப்பதிவு செய்து 17 வயது சிறுவனை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.