அரக்கோணம் அருகே பயங்கரம்: துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி தொழிலாளி கொலை மனைவி கைது


அரக்கோணம் அருகே பயங்கரம்: துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி தொழிலாளி கொலை மனைவி கைது
x
தினத்தந்தி 22 Oct 2018 10:30 PM GMT (Updated: 22 Oct 2018 5:34 PM GMT)

அரக்கோணம் அருகே துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி தொழிலாளியை கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள மோசூர் கிராமத்தை சேர்ந்த பலராமன் என்பவரின் மகன் பிரபு (வயது 30). சென்னையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி லட்சுமி (27). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. கோகுல் (8), சூர்யா (7) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். மகன்கள் அதே பகுதியில் உள்ள அரசினர் பள்ளியில் படித்து வந்தனர்.

பிரபுவுக்கும் லட்சுமிக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு பிரபு, லட்சுமியிடம் தகராறு செய்து விட்டு தூங்கி விட்டார்.

நள்ளிரவு 1 மணிக்கு லட்சுமி எழுந்து பக்கத்து வீட்டில் உள்ளவர்களை எழுப்பி எனது கணவர், கட்டிலில் இருந்து தவறி கீழே விழுந்து மயக்கமடைந்து விட்டார். அவரை மருத்துவமனைக்கு தூக்கி செல்ல வேண்டும் என்று கூறினார். உடனடியாக அவர்கள் பிரபுவை 108 ஆம்புலன்ஸ் மூலம் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், பிரபு இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்பாபு ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது பிரபு சாவில் சந்தேகம் அடைந்த போலீசார், லட்சுமியிடம் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்குபின் முரணாக பதில் கூறினார். இதையடுத்து லட்சுமியிடம் தீவிர விசாரணை நடத்தியபோது அவர் தனது கணவனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இதுகுறித்து லட்சுமி போலீசாரிடம் கூறியதாவது:-

எனது கணவர் பிரபு தினமும் என்னை அடித்து துன்புறுத்தி வந்தார். நேற்று முன்தினம் அதேபோல் அடித்து துன்புறுத்தியதால் என்னால் வலி தாங்க முடியவில்லை. இதனால் துப்பட்டாவால் பிரபுவின் கழுத்தில் முடிச்சு போட்டு இறுக்கினேன். இதில் அவர் துடிதுடித்து இறந்தார். நள்ளிரவில் எனது கணவர் கீழே விழுந்து மயக்கமடைந்தார் என்று கூறி நாடகமாடி அக்கம், பக்கத்தில் இருந்தவர்களை நம்ப வைத்து தப்பிக்க முயற்சித்தேன். ஆனால் போலீசாரிடம் எனது நாடகம் எடுபடாமல் சிக்கி கொண்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து லட்சுமியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனைவியே கணவனை கொலை செய்த சம்பவம் மோசூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story