தொழிலாளியை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை திருப்பத்தூர் கோர்ட்டு தீர்ப்பு


தொழிலாளியை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை திருப்பத்தூர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 22 Oct 2018 10:15 PM GMT (Updated: 2018-10-22T23:08:52+05:30)

திருப்பத்தூரில் தொழிலாளியை கொலை செய்த வாலிபருக்கு திருப்பத்தூர் கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

திருப்பத்தூரில் உள்ள ஆதிசக்திநகரை சேர்ந்தவர் சக்தி, தச்சு தொழிலாளி. இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ஜெயக்குமார் (வயது 30). இவர்கள் 2 பேரின் குடும்பத்தினர் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. அதனால் அவர்கள் ஒருவருக்கொருவர் பேசி கொள்ளாமல் இருந்தனர்.

ஆனால் ஜெயக்குமாரின் மனைவி கனிமொழி மட்டும் அவரது வீட்டிற்கு தெரியாமல் சக்தியின் மனைவி விஜயாவிடம் பேசி வந்தார். இந்த தகவல் ஜெயக்குமாரின் குடும்பத்தினருக்கு தெரிந்தது. இதன் காரணமாக ஜெயக்குமாருக்கும், கனிமொழிக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது.

மேலும் சக்தி குடும்பத்தினர் சொல்லி கொடுத்துதான் தனது மனைவி தன்னுடன் சண்டை போடுகிறாள் என ஜெயக்குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து ஜெயக்குமார், அவரது தாயார் பத்மினி, தம்பி உதயகுமார் ஆகியோர் கடந்த 15.10.16 அன்று சக்தியிடம் தகராறில் ஈடுபட்டனர்.

இதில் ஆத்திரமடைந்த உதயகுமார் சக்தியை கையால் தாக்கினார். ஜெயக்குமார், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சக்தியின் வயிற்றில் குத்தினார். இதில் சக்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த வழக்கு திருப்பத்தூரில் உள்ள மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது.

நேற்று வழக்கை நீதிபதி இந்திராணி விசாரித்து, ஜெயக்குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். உதயகுமார், பத்மினி ஆகிய 2 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

Next Story