திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருந்த 9 நைஜீரியர்கள் கைது


திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருந்த 9 நைஜீரியர்கள் கைது
x
தினத்தந்தி 23 Oct 2018 5:00 AM IST (Updated: 23 Oct 2018 12:11 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கி இருந்த 9 நைஜீரியர்களை போலீசார் கைது செய்தனர்.

ஊத்துக்குளி,

திருப்பூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் ஏராளமான பனியன் நிறுவனங்கள் உள்ளன. இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கும் பனியன் ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக நைஜீரிய நாட்டை சேர்ந்தவர்களும் தங்கி இருந்து பனியன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதில் திருப்பூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் தங்கி இருக்கும் நைஜீரியர்களில் பலர் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதுபோல் தங்கி இருப்பவர்களை போலீசார் அவ்வப்போது அடையாளம் கண்டு கைது செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் திருப்பூர் அருகே எஸ்.பெரியபாளையத்தில் உள்ள பெருமாள்கார்டன் பகுதியிலும், கூலிபாளையம் ஏ.சி.எஸ்.நகர் பகுதியிலும் நைஜீரியர்கள் சிலர் உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருந்து பனியன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாக ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி உத்தரவின் பேரில் ஊத்துக்குளி இன்ஸ்பெக்டர் சுந்தர பாண்டியன் தலைமையிலான போலீசார் நேற்று காலை நைஜீரியர்கள் தங்கி இருந்த வீடுகளுக்கு சென்றனர்.

அப்போது அங்கிருந்த 9 நைஜீரியர்களை ஊத்துக்குளி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்களிடம் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட உரிய ஆவணங்கள் இல்லை என்பதும், அவர்கள் இங்கு சட்டவிரோதமாக தங்கி இருந்து பனியன் துணிகளை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக நைஜீரியாவை சேர்ந்த பிளஸ்சிங்கு(வயது 30), பிச்வா(45), சீனேடு(30), யுகோசிகுவோ(32), டெய்(37), மற்றொரு சீனேடு(34), வின்சென்ட்(28), ஸ்டீபன்(35), சுகுமேகா(40) ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story