நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி புஷ்கர விழா இன்று நிறைவு தீப ஆரத்தி எடுத்து பக்தர்கள் வழிபாடு
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி புஷ்கர விழா இன்று (செவ்வாய்க்கிழமை) நிறைவு பெறுகிறது. நேற்று தீப ஆரத்தி எடுத்து பக்தர்கள் வழிபாடு நடத்தினார்கள்.
144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் தாமிரபரணி மகா புஷ்கர விழா கடந்த 11-ந் தேதி தொடங்கியது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 64 தீர்த்தக்கட்டங்கள், 149 படித்துறைகளிலும் இந்த விழா நடந்து வருகிறது.
தினமும் காலையில் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடும் நிகழ்ச்சியும், மாலையில் ஆரத்தி எடுத்து வழிபடும் நிகழ்ச்சியும் நடந்து வருகிறது. இந்த புஷ்கர விழாவில் வெளி மாவட்டம் மட்டும் அல்லாமல், ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் கலந்து கொண்டு புனித நீராடி வருகிறார்கள்.
12-வது நாளான நேற்றும் புஷ்கர விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர். நெல்லை வண்ணார்பேட்டை பேராட்சியம்மன் கோவில், குறுக்குத்துறை முருகன் கோவில், கைலாசபுரம் தைப்பூச மண்டபம், நெல்லை மணிமூர்த்தீசுவரம், அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் ஜடாயு படித்துறைகளிலும், சீவலப்பேரி துர்காம்பிகை கோவில் படித்துறைகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
அதேபோல் பாபநாசம், அம்பை, கல்லிடைக்குறிச்சி, சேரன்மாதேவி, திருப்புடைமருதூர், கோடகநல்லூர், அத்தாளநல்லூர் உள்ளிட்ட படித்துறைகளிலும் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.
மேலும், பாபநாசத்தில் அகில பாரத துறவியர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட புஷ்கர விழா நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. அதேபோல் நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் ஜடாயு படித்துறையிலும் நேற்று மாலையுடன் புஷ்கர விழா நிறைவடைந்தது.
நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை முருகன் கோவிலில் நேற்று காலை 6 மணி முதல் 8 மணி வரை யாகசாலை பூஜை, மாலை 5.30 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனத்தின் புஷ்பாஞ்சலி, 6 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
நெல்லை சந்திப்பு கைலாசபுரம் தைப்பூச மண்டபத்தில் அதிகாலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 6 மணி முதல் புனித நீராடல், திருமுறை இன்னிசை நிகழ்ச்சி, முன்னோர்களுக்கு வழிபாடு, சதுர்வேத பாராயணம், கைலாசநாதர் கோவிலில் ருத்ர ஜெபம் நடந்தது. மாலை 6 மணிக்கு மங்கள தீப ஆரத்தி நடந்தது. இரவு 7 மணிக்கு ம.தி.தா. இந்து கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் பக்தி சொற்பொழிவு நடந்தது.
சீவலப்பேரி துர்காம்பிகா கோவிலில் நேற்று காலை ருத்ர ஹோமம், மாலையில் ஆரத்தி வழிபாடும் நடந்தது. இந்த புஷ்கர விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர். நெல்லை மாவட்டத்தில் 12 நாட்கள் நடைபெற்ற மகா புஷ்கர விழா இன்று மாலையுடன் (செவ்வாய்க்கிழமை) நிறைவு பெறுகிறது.
புஷ்கர விழாவையொட்டி நெல்லை மாநகர பகுதியில் நேற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நெல்லை வண்ணார்பேட்டை, ஈரடுக்கு மேம்பாலம், சந்திப்பு பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெல்லை ரெயில் நிலையம், புதிய பஸ் நிலையத்திலும் பயணிகள் கூட்டம் அலை மோதியது.
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் புஷ்கர விழாவில் நேற்று கன்னி ராசிக்காரர்கள் புனித நீராட உகந்ததாக அறிவிக்கப்பட்டு இருந்தது. எனவே அந்த ராசிக்காரர்கள் திரளாக வந்து தாமிரபரணியில் புனித நீராடினர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதி பாயும் மருதூர் அணையில் இருந்து புன்னக்காயல் வரையிலும் உள்ள 29 படித்துறைகளிலும் பக்தர்கள் புனித நீராடினர். மகா புஷ்கர விழாவின் நிறைவு நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) துலாம் ராசிக்காரர்கள் புனித நீராட உகந்த நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, அந்த ராசிக்காரர்களும், மற்ற ராசிக்காரர்களும் திரளாக வந்து புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் முறப்பநாடு கைலாசநாத சுவாமி கோவில் படித்துறை, அகரம் பெருமாள் கோவில் படித்துறை, ஸ்ரீவைகுண்டம் பஸ் நிலையம் பின்புறம் உள்ள படித்துறை, ஆழ்வார்திருநகரி சங்கு படித்துறை, மேல ஆழ்வார்தோப்பு காந்தீசுவர ஏகாந்தலிங்க சுவாமி கோவில் படித்துறை, குருகூர்நங்கை ஆண்டபெருமாள் படித்துறை, பால்குளம் குபேரன் படித்துறை, குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் படித்துறை, மங்களகுறிச்சி,
ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில் படித்துறை, சுந்தரவிநாயகர் கோவில் படித்துறை, வாழவல்லான், உமரிக்காடு, முக்காணி ராமபரமேசுவரர் கோவில் படித்துறை, வெங்கடேச பெருமாள் கோவில் படித்துறை, ஆத்தூர் அரச மரத்தடி படித்துறை, சேர்ந்தபூமங்கலம் கைலாசநாத சுவாமி கோவில் படித்துறை, சங்கமம் படித்துறை உள்ளிட்ட படித்துறைகளில் நேற்று காலையில் யாகசாலை பூஜை, சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் பக்தர்கள் தாமிரபரணியில் புனித நீராடினர்.
மாலையில் தாமிரபரணி நதிக்கு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தாமிரபரணி அன்னையை வழிபட்டனர். ஆழ்வார்திருநகரி சங்கு படித்துறையில் திருப்பதி கோவிந்த ராமானுஜ ஜீயர் புனித நீராடினார். வாழவல்லான் படித்துறையில் பெருங்குளம் செங்கோல் ஆதீனம் புனித நீராடினார். முன்னதாக அவர், படித்துறையில் கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகளை நடத்தினார். பின்னர் தாமிரபரணி நதிக்கு அபிஷேகம் நடந்தது. ஸ்ரீவைகுண்டம் பஸ் நிலையம் பின்புறம் உள்ள படித்துறையில் வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடம் சக்தி அம்மா சிறப்பு பூஜைகளை நடத்தினார்.
படித்துறைகளின் அருகில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. நதியில் ஆழமான பகுதிக்கு பக்தர்கள் செல்லாத வகையில், தடுப்புகள் அமைக்கப்பட்டு, மிதவைகள் மிதக்க விடப்பட்டு உள்ளன.
படித்துறைகளில் ஆண்கள், பெண்கள் தனித்தனியாக புனித நீராட இடவசதி செய்யப்பட்டு உள்ளது.
நதியில் புனித நீராடும் பக்தர்களை கண்காணிக்கும் வகையில் போலீசார், தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகுகளில் தயார் நிலையில் உள்ளனர். பக்தர்களுக்கு குளிர்பானம், அன்னதானம் போன்றவற்றை தன்னார்வலர்கள் வழங்கினர்.
Related Tags :
Next Story