கன்னட திரைப்பட வர்த்தகசபையில் நடிகை சுருதி ஹரிகரன் மீது நடிகர் அர்ஜூனின் மாமனார் புகார்


கன்னட திரைப்பட வர்த்தகசபையில் நடிகை சுருதி ஹரிகரன் மீது நடிகர் அர்ஜூனின் மாமனார் புகார்
x
தினத்தந்தி 22 Oct 2018 10:45 PM GMT (Updated: 22 Oct 2018 6:52 PM GMT)

பாலியல் குற்றச்சாட்டு கூறிய நடிகை சுருதி ஹரிகரன் மீது நடிகர் அர்ஜூனின் மாமனார் கன்னட திரைப்பட வர்த்தகசபையில் புகார் அளித்தார். பின்னர் அவர் கூறுகையில், இந்த பாலியல் புகாரால் தனது மருமகன் அர்ஜூனின் புகழுக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டதாக தெரிவித்தார்.

பெங்களூரு,

நடிகர் அர்ஜூன் நடித்த ‘நிபுணன்‘ என்ற படத்தில், நடிகை சுருதி ஹரிகரன் நடித்தார். அந்த படப்பிடிப்பின்போது, அர்ஜூன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்று நடிகை சுருதி ஹரிகரன் புகார் கூறி இருக்கிறார். கன்னட திரையுலகில் இது புயலை கிளப்பியுள்ளது. அர்ஜூன் குடும்பத்தினர் இதை மறுத்துள்ளனர். இந்த நிலையில் பாலியல் புகார் கூறிய நடிகை சுருதி ஹரிகரன் மீது கன்னட திரைப்பட வர்த்தக சபையில் அர்ஜூனின் மாமனாரும், நடிகருமான ராஜேஷ் புகார் கொடுத்துள்ளார்.

புகார் வழங்கிய பிறகு ராஜேஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நடிகை சுருதி ஹரிகரன் கூறியுள்ள பாலியல் புகாரால், எனது மருமகனின்(அர்ஜூன்) புகழுக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டது. இது எங்களுக்கு மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி கன்னட திரைப்பட வர்த்தகசபையில் புகார் கொடுத்துள்ளேன்.

இதுகுறித்து நடிகர்கள் சங்க தலைவர் அம்பரீசுடன், திரைப்பட வர்த்தகசபை நிர்வாகிகள் கலந்து ஆலோசனை நடத்தி உரிய முடிவு எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இதில் தீர்வு கிடைக்காவிட்டால், நாங்கள் கோர்ட்டுக்கு செல்வோம். அர்ஜூனுக்கு கன்னட திரையுலகம் மட்டுமின்றி, 6 கோடி கன்னடர்களின் ஆதரவும் உள்ளது. அர்ஜூன் மீதான பாலியல் புகாருக்கு பின்னணியில் சதி இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். அதுபற்றி என்னால் உறுதியாக சொல்ல முடியாது. இவ்வாறு ராஜேஷ் கூறினார்.

Next Story