ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு வைகை தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை


ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு வைகை தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 22 Oct 2018 10:15 PM GMT (Updated: 22 Oct 2018 7:03 PM GMT)

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு வைகை தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் வீரராகவ ராவ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரி முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களின் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளித்தனர். ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் செல்லத்துரை தலைமையில் விவசாயிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:–

 தமிழகத்திலேயே 2–வது பெரிய கண்மாய் என்று அழைக்கப்படும் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் நீரின்றி கடந்த 4 ஆண்டுகளாக வறண்டுபோய் உள்ளது.

இதனால் கண்மாயை நம்பி உள்ள மக்களும், விவசாயிகளும் அவதியடைந்து வருகிறோம். குடிநீர் இல்லாததால் கால்நடைகள் நோய்வாய்பட்டு இறந்து வருகின்றன. தற்போது வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு பெரிய கண்மாய்க்கு வந்துள்ளது. மேலும் வைகை அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளது. இதனால் மீண்டும் தண்ணீர் திறந்துவிட வாய்ப்பு உள்ளது. எனவே இந்த ஆண்டு வைகை தண்ணீரை ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு திறந்துவிட்டு சுற்றுவட்டார கிராம மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பயன்கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

ராமநாதபுரம் மாவட்டம் மேலமுந்தல் பகுதியை சேர்ந்த மீனவர்கள் மற்றும் மீனவ மகளிர் மன்றத்தினர் திரளாக வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:– மேலமுந்தல் கிராமத்தில் காலம்காலமாக மீன்பிடி தொழில் ஆழ்கடல் பகுதியில் பிடித்து வருகிறோம். நாங்கள் எங்களுக்கு மீன்பிடிக்க துணையாக வெளிமாவட்ட மீனவர்களை கூலிக்கு பணியமர்த்தி மீன்பிடிக்க செய்து வருகிறோம். இந்த நிலையில் சிலர் வெளிமாவட்ட மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்கக்கூடாது என்று புகார் தெரிவித்து தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதனால் நாங்கள் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளோம். ராமேசுவரம், மண்டபம், கீழக்கரை, முத்துப்பேட்டை போன்ற பகுதிகளில் வெளியூர் மீனவர்கள் தங்கி கூலிக்கு மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். அவற்றை அனுமதிக்கும்போது மேலமுந்தல் பகுதியில் மட்டும் தடைவிதிக்கப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது.

நாங்கள் அரசால் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதில்லை. எனவே, வெளிமாவட்ட மீனவர்களை கூலிக்கு வேலைக்கு வைத்து மீன்பிடி தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.


Next Story