பெரவள்ளூரில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன


பெரவள்ளூரில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன
x
தினத்தந்தி 22 Oct 2018 10:45 PM GMT (Updated: 22 Oct 2018 7:07 PM GMT)

வடசென்னையில் பரவி வரும் டெங்கு காய்ச்சல் தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நேற்று பெரவள்ளூரில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

திரு.வி.க. நகர், 

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் நோய்கள் வேகமாக பரவி வருகிறது. இந்த நோய்களில் இருந்து மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ளவும், இந்த நோய்கள் பரவாமல் தடுக்கும் வகையிலும் மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. 

இந்த நிலையில் சென்னை பெரம்பூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு சிறுவன் மர்ம காய்ச்சலில் உயிரிழந்தான். அதைத்தொடர்ந்து புளியந்தோப்பு பகுதியில் 36 வயது பெண் மற்றும் 8 வயது சிறுவன் ஆகியோர் திடீரென வாந்தி மற்றும் வயிற்றுபோக்கு ஏற்பட்டு இறந்தனர். 

இதைப்போல கொளத்தூர் தணிகாசலம் நகரைச்சேர்ந்த இரட்டைக்குழந்தைகள் தற்போது டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர். இவ்வாறு வடசென்னையில் அடுத்தடுத்து ஏற்படும் மரணங்களால் இந்த பகுதிகளை சேர்ந்த மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். 

நிலவேம்பு குடிநீர்

எனவே இந்த பகுதியில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பெரவள்ளுர் காவலர் குடியிருப்பில் நேற்று டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு வடக்கு மற்றும் தெற்கு மண்டல போலீஸ் கூடுதல் கமி‌ஷனர் இரா.தினகரன் தலைமை தாங்கினார். முகாமில் போலீசாரின் குடும்பத்தினர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

அவர்களுக்கு, டெங்கு பரவாமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டது. மேலும் டெங்கு விழிப்புணர்வு நடவடிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. முகாமில் கலந்து கொண்டவர் களுக்கு டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. 

செம்பியத்தில் இன்று முகாம்

இந்த நிகழ்ச்சியில் வடக்கு மண்டல போலீஸ் இணை கமி‌ஷனர் விஜயகுமாரி, புளியந்தோப்பு துணை கமி‌ஷனர் சாய்சரண் தேஜஸ்வி, செம்பியம் உதவி கமி‌ஷனர் அரிக்குமார், திரு.வி.க நகர் 6–வது மண்டல அதிகாரி அனந்தகுமார், செயற்பொறியாளர் செந்தில்நாதன் மற்றும் சுகாதார அதிகாரி டாக்டர் ஆஷா லதா ஆகியோர் பங்கேற்றனர்.

இதன் தொடர்ச்சியாக செம்பியம் போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் இன்று (செவ்வாய்கிழமை) டெங்கு விழிப்புணர்வு முகாம் நடக்கிறது.

Next Story