பூண்டி ஏரிக்கு 1¼ டி.எம்.சி. கிருஷ்ணா நதிநீர் வந்தது
கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 23 நாட்களில் 1.250 டி.எம்.சி. கிருஷ்ணா நதிநீர் வந்து சேர்ந்து உள்ளது.
செங்குன்றம்,
கோடை வெயில் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. இதனால் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடும்படி ஆந்திர அரசுக்கு தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடிதம் எழுதினர்.
அதன்பேரில் கடந்த மாதம் 22–ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விட்டனர். இந்த தண்ணீர் 177 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து 29–ந் தேதி அதிகாலையில் பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது.
கண்டலேறு அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வரத்தால் பூண்டி ஏரியின் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு பூண்டி ஏரியில் இருந்து கடந்த 2–ந் தேதி பேபி கால்வாய் மூலமாக சென்னை குடிநீர் வாரியத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. 6–ந் தேதி இணைப்பு கால்வாய் வழியாக புழல் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
23 நாட்களில் 1¼ டி.எம்.சி.
பூண்டி ஏரியில் 3,231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். கடந்த மாதம் 29–ந் தேதி ஏரியில் வெறும் 13 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டும்தான் இருப்பில் இருந்தது. நேற்று காலை ஏரியில் 743 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. இணைப்பு மற்றும் பேபி கால்வாயில் 407 மில்லியன் கனஅடி தண்ணீர் புழல் மற்றும் சென்னை குடிநீர் வாரியத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அந்த கணக்குப்படி பார்த்தால் கடந்த மாதம் 29–ந் தேதி முதல் நேற்று காலை 6 மணி வரை 23 நாட்களில் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 1.250 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
பூண்டி ஏரிக்கு நேற்று காலை 6 மணி நிலவரப்படி கிருஷ்ணா நதிநீர் வினாடிக்கு 559 கனஅடி வந்து கொண்டிருந்தது. பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு வினாடிக்கு 400 கனஅடி வீதமும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு 19 கனஅடி வீதமும் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
Related Tags :
Next Story