ஆத்தூரில் வீடு புகுந்து பயங்கரம் பள்ளி மாணவி வெட்டிக்கொலை தலையை துண்டித்து ரோட்டில் வைத்த டிரைவர் கைது
ஆத்தூரில் வீடு புகுந்து பள்ளி மாணவி அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரது தலையை துண்டித்து எடுத்து ரோட்டில் வைத்துச்சென்ற டிரைவர் கைது செய்யப்பட்டார்.
இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் கூறப்பட்டதாவது:-
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தளவாய்பட்டி தெற்கு காடு மலையடிவாரம் பகுதியை சேர்ந்தவர் சாமிவேல். கூலித்தொழிலாளி. இவரது மனைவி சின்னபொண்ணு, இவர்களுக்கு அருள்ஜோதி (வயது 21), ராஜலட்சுமி (14) என 2 மகள்களும், சத்குருநாதன் (19) என்ற ஒரு மகனும் இருந்தனர். அருள்ஜோதிக்கு திருமணம் ஆகிவிட்டது. இளையமகள் ராஜலட்சுமி தளவாய்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள்.
இந்த நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் ராஜலட்சுமியும், அவரது தாயாரும் வீட்டில் உட்கார்ந்து பூ கட்டிக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு அரிவாளுடன் வந்த அதே பகுதியை சேர்ந்த நெல் அறுவடை எந்திர டிரைவர் கார்த்திக் என்ற தினேஷ்குமார் (26) சின்னபொண்ணுவை தாக்கினார்.
பின்னர் மாணவி ராஜலட்சுமியை அரிவாளால் சரமாரியாக கழுத்தில் வெட்டினார். பின்னர் மாணவியின் தலையை துண்டித்து ரத்தம் சொட்ட சொட்ட கையில் எடுத்துச்சென்று ரோட்டில் வைத்துவிட்டு தப்பி ஓட முயன்றார். அப்போது தினேஷ்குமாரின் மனைவி சாரதா மற்றும் அவருடைய தம்பி கல்லூரி மாணவர் சசிகுமார் ஆகியோர் தினேஷ்குமாரை பிடித்து ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர்கள் கேசவன், சரவணன் மற்றும் போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் தினேஷ்குமார் ராஜலட்சுமியை ஒருதலையாக காதலித்து வந்ததும், அவர் பள்ளிக்கு சென்று வரும் போதெல்லாம் அவரது பின்னால் சென்று வந்ததும், இதுகுறித்து ராஜலட்சுமி தனது தந்தையிடம் தெரிவித்து விடுவேன் என்று தினேஷ்குமாரிடம் கூறியதால் ஆத்திரத்தில் அவர் ராஜலட்சுமியை வெட்டி கொலை செய்ததும் தெரியவந்தது. மேலும் மாணவியை அவர் உல்லாசத்துக்கு அழைத்ததாகவும் தெரிகிறது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்.கார்த்திக்குமார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று மாணவியின் உடல், தலை கிடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் அந்த பகுதியில் ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மாணவியின் உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.
Related Tags :
Next Story