புதுச்சேரியில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 39 பேருக்கு சிகிச்சை


புதுச்சேரியில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 39 பேருக்கு சிகிச்சை
x
தினத்தந்தி 22 Oct 2018 10:45 PM GMT (Updated: 22 Oct 2018 7:28 PM GMT)

புதுச்சேரியில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஜிப்மரில் 39 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை இயக்குனர் ராமன் தெரிவித்தார்.

புதுச்சேரி,

புதுச்சேரி அரசின் சுகாதாரத்துறை சார்பில் உலக அயோடின் குறைபாடு கோளாறுகள் தடுப்புதினம் (அக்டோபர் 21) கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கல்லூரி மாணவ–மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதை அரசு சுகாதாரத்துறை இயக்குனர் ராமன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் துணை இயக்குனர் ஆனந்தன், சுகாதாரத்துறை ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

ஊர்வலம் புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து மி‌ஷன் வீதி, நேரு வீதி, செஞ்சி சாலை, எஸ்.வி.படேல் சாலை வழியாக கடற்கரை காந்தி சிலையுடன் நிறைவுபெற்றது. இதில் மாணவிகள் பொதுமக்களுக்கு அயோடின் கலந்த உப்பு மற்றும் அயோடின் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டிய அவசியம் என்பதை வலியுறுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.

முன்னதாக புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் ராமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

புதுவை மற்றும் தமிழகத்தை சேர்ந்த 39 பேருக்கு பன்றி காய்ச்சல் நோய் பாதிப்பு அறிகுறி இருப்பது தெரியவந்தது. அவர்களுக்கு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் தனிபிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் குணமடைந்து விரைவில் வீடு திரும்புவார்கள்.

வீட்டில் யாருக்காவது காய்ச்சல் இருப்பது தெரியவந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், வயதானோர் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் திரையரங்குகள், விழாக்களில் கலந்துகொள்ள வேண்டாம்.

இதனால் நோய் பரவுவது கட்டுப்படுத்தப்படும். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயம் கைக்குட்டைகள் பயன்படுத்த வேண்டும். அதேபோல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுடன் கைகுலுக்க வேண்டாம்.

புதுவையில் கடந்த ஆண்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு பன்றி காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டது. அதேபோல் நாளை (இன்று) முதல் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்திலும் நிலவேம்பு கசாயம் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதுவையில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்திலும் தேசிய அயோடின் குறைபாடு கோளாறு தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை ஆயோடின் முக்கியத்துவத்தை பற்றி விழிப்புணர்வு கலந்துரையாடல் நடக்கிறது.


Next Story