காலிங்கராயன்பாளையத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட வேண்டும் - த.மா.கா.வினர் கலெக்டரிடம் மனு
காலிங்கராயன்பாளையத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் த.மா.கா.வினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர்.
ஈரோடு பெரியசேமூர் பொன்னிநகரை சேர்ந்த 25–க்கும் மேற்பட்டோர் கொடுத்திருந்த மனுவில், ‘எங்கள் பகுதியில் 300 குடும்பங்கள் உள்ளன. தற்போது எங்கள் குடியிருப்பு மத்தியில் ஒருவர் தறிப்பட்டறை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இங்கு தறிப்பட்டறை அமைக்கப்பட்டால் மாணவ –மாணவிகள் மற்றும் வயதானவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே எங்கள் பகுதியில் தறிப்பட்டறை அமைக்கக்கூடாது’ என்று கூறி இருந்தனர்.
ஈரோடு மத்திய மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் விஜயகுமார் தலைமையில் நிர்வாகிகள் கலெக்டர் கதிரவனிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:–
ஈரோடு அருகே உள்ள காலிங்கராயன்பாளையம், எலவமலை, அணை நாசுவம்பாளையம் ஆகிய கிராமங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராமங்களில் 5 ஆரம்ப பள்ளிக்கூடங்களும், ஒரு நடுநிலை பள்ளிக்கூடமும் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடங்களில் 500–க்கும் மேற்பட்ட மாணவ –மாணவிகள் படித்து வருகிறார்கள். இவர்கள் மருத்துவ வசதி பெறுவதற்கு அரசு ஆஸ்பத்திரி இல்லை. எனவே மேற்கண்ட கிராமங்களுக்கு மைய பகுதியாக உள்ள காலிங்கராயன் பாளையத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.
மக்கள் மன்றம் சார்பில் கொடுக்கப்பட்டு இருந்த மனுவில், ‘பஸ், மினி பஸ், ஷேர் ஆட்டோக்களில் சட்டத்தை மீறி அதிக அளவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு வேகமாக செல்கிறார்கள். இதனால் சில நேரங்களில் விபத்துகள் நடக்கிறது. எனவே அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.
தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் கொடுக்கப்பட்டு இருந்த மனுவில், ‘ஈரோடு கிருஷ்ணா தியேட்டர், நேதாஜி தினசரி மார்க்கெட், மணிக்கூண்டு ஆகிய பகுதிகளில் ரோட்டின் இருபுறங்களிலும் வாகனங்கள் நிறுத்துவதால் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அந்த வழியாக 108 வாகனங்கள் கூட செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகிறது. எனவே அங்கு போக்குவரத்தை சீரமைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.
ஈரோடு ஆர்.என்.புதூர் மாதேஸ்வரன் நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்திருந்த மனுவில், ‘எங்கள் நகரில் உள்ள கோவிலை சுற்றி பொது இடம் உள்ளது. இந்த இடத்தில் தற்போது சுற்றுச்சுவர் கட்ட சிலர் முயற்சி எடுத்து வருகிறார்கள். எனவே அதை தடை செய்ய வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.
பெருந்துறை அருகே உள்ள பொன்னான்டவலசு பகுதியை சேர்ந்த 20–க்கும் மேற்பட்டோர் கலெக்டரிடம் கொடுத்திருந்த மனுவில் கூறி இருந்ததாவது:–
எங்கள் பகுதியில் 40 குடும்பத்தினர் கடந்த 60 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். இந்த நிலையில் கடந்த 17–ந்தேதி நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளரிடம் இருந்து எங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. அதில் நாங்கள் குடியிருந்து வரும் 40 வீடுகளையும் உடனடியாக காலி செய்யும்படி கூறப்பட்டு உள்ளது. எங்களுக்கு வேறு எங்கும் இடம் இல்லாததால் நாங்கள் தொடர்ந்து அந்த இடத்தில் வசிக்க வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.
இதேபோல் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் தங்களுடைய கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர். மொத்தம் 239 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றை அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் கதிரவன் உத்தரவிட்டார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.