‘சாதிக்க துணிந்தவர்களுக்கு வயது தடையில்லை’ 4 ஏக்கரில் சந்தன தோப்பு உருவாக்கிய 70 வயது விவசாயி


‘சாதிக்க துணிந்தவர்களுக்கு வயது தடையில்லை’ 4 ஏக்கரில் சந்தன தோப்பு உருவாக்கிய 70 வயது விவசாயி
x
தினத்தந்தி 23 Oct 2018 4:45 AM IST (Updated: 23 Oct 2018 1:07 AM IST)
t-max-icont-min-icon

‘சாதிக்க துணிந்தவர்களுக்கு வயது ஒரு தடையே இல்லை’ என்பதற்கு எடுத்துக்காட்டாக சென்னிமலை அருகே 4 ஏக்கரில் சந்தன தோப்பை 70 வயது விவசாயி ஒருவர் உருவாக்கி உள்ளார்.

சென்னிமலை,

ஈரோடு மாவட்டம், சென்னிமலையை அடுத்த வாய்ப்பாடி மூணாம்பள்ளியை சேர்ந்தவர் தங்கமுத்து (வயது 70). விவசாயி. இவருக்கு சொந்தமான 12 ஏக்கர் தோட்டம் அந்த பகுதியில் உள்ளது.

இதில் 4 ஏக்கரில் சந்தன மரங்களை கடந்த 8 ஆண்டுகளாக வளர்த்து வருகிறார். சந்தன மரங்களை வளர்த்தால் அது திருட்டு போய்விடும் என்று பல விவசாயிகளின் பயத்தை புறந்தள்ளிவிட்டு மிகவும் துணிச்சலாக சந்தன மரங்களை தன்னுடைய தோட்டத்தில் அவர் வளர்த்து வருகிறார்.

இதுகுறித்து தங்கமுத்து கூறியதாவது:–

கடந்த 2001–ம் ஆண்டு தனியார் நிலங்களில் மரம் வளர்க்கும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வனத்துறை மூலம் எனக்கு இலவசமாக சந்தன மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. ஈரோடு மாவட்டத்தில் மற்ற எந்த விவசாயிகளும் சந்தன மரம் வளர்க்க முன் வராத நிலையில் நான் மட்டும் துணிச்சலாக 1,000 சந்தன மரக்கன்றுகளை வனத்துறையிடம் இருந்து பெற்று என்னுடைய தோட்டத்தில் நட்டு வளர்க்க தொடங்கினேன். அப்போதிலிருந்து சந்தன மரக்கன்றுகளை ‘கண்களை இமை காப்பது போல்’ என்னுடைய குழந்தை போல் பாவித்து வளர்த்து வந்தேன். தற்போது அது வளர்ந்து சந்தன தோப்பாகிவிட்டது.

சந்தன மரங்களை வளர்ப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. சந்தனமரம் தனித்து வளராது. இந்த மரத்துடன் ஏதேனும் வேறு ஒரு மரத்தை துணை மரமாக வளர்க்க வேண்டும். எனவே வனத்துறை அதிகாரிகளின் ஆலோசனையின் படி சந்தன மரங்களுடன், அதற்கு உறுதுணையாக நாட்டு வேம்பு மரங்களையும் வளர்த்தேன். மேலும் சந்தன மரங்களுடன் கீரை மற்றும் துவரை பயிரை ஊடுபயிராக வளர்த்தேன்.

கடந்த ஆண்டு ஏற்பட்ட கடும் வறட்சியால் சுமார் 200 சந்தன மரங்கள் வரை பாதிக்கப்பட்டுவிட்டன. தற்போது 800 சந்தன மரங்கள் நன்கு வளர்ந்துள்ளன. அடுத்த ஆண்டு சந்தன மரங்களுக்கு துணை மரங்களாக வளர்ந்து வரும் வேப்ப மரங்களை வெட்டி அப்புறப்படுத்த வனத்துறை அதிகாரிகள் ஆலோசனை கூறியுள்ளனர். அவ்வாறு செய்தால் சந்தன மரங்கள் நன்றாக வளரும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

இந்த மரங்கள் பலன் கொடுக்க இன்னும் 20 ஆண்டுகள் ஆகும். மரம் வளர்ப்பது எனக்கு பிடித்த வேலையாக உள்ளது. மேலும் நன்கு வளர்ந்த சந்தன மரத்தின் விதைகளை விதைப்பந்துகள் செய்து இலவசமாக வனப்பகுதிகளில் தூவி வருகிறேன். ‘சாதிக்க துணிந்து விட்டால் வயது ஒரு தடையே இல்லை’ என மற்ற விவசாயிகளையும் ஊக்கப்படுத்தி வருகிறேன்.

இவ்வாறு தங்கமுத்து கூறினார்.

ஈரோடு மாவட்டத்திலேயே அதிக அளவில் தனியார் பட்டா நிலங்களில் சந்தன மரம் வளர்த்துள்ளது இவர் தான். மேலும் இதை முறையாக அரசுக்கு தெரிவித்து பதிவு செய்தும் உள்ளார். அதுமட்டுமின்றி சந்தன மரம் வளர்க்கும் ஆர்வம் உள்ள விவசாயிகளை தங்கவேல் தோட்டத்துக்கு அழைத்து வந்து வனத்துறையினர் காண்பித்து வருகிறார்கள்.

சந்தன மரம் வளர்ப்பு பற்றி உதவி வன பாதுகாவலரும், மரம் வளர்ப்பு திட்டத்தின் ஈரோடு சிறப்பு அதிகாரியுமான ரவிச்சந்திரன் கூறுகையில், ‘விவசாயிகள் சந்த மரக்கன்றுகளை நடவு செய்ய வனத்துறையிடம் எந்தவித முன் அனுமதியும் பெற வேண்டிய அவசியம் இல்லை. அதுமட்டுமின்றி சந்தன மரக்கன்றுகளை நாங்களே விவசாயிகளுக்கு இலவசமாக தருகிறோம். மேலும் மரக்கன்றுகளை நட்டு ஒரு ஆண்டுக்கு பின்னர் எங்கள் உதவியுடன் வருவாய்த்துறையில் பதிவு செய்ய வேண்டும். மரங்கள் நன்கு வளர்ந்த பின்பு அரசுக்கு தான் விற்பனை செய்யவேண்டும். தனிப்பட்ட முறையில் யாருக்கும் இதை விற்பனை செய்யக்கூடாது. சந்தன மரத்தில் 10–க்கும் மேற்பட்ட ரகங்கள் உள்ளன. தற்போது சந்தன மரக்கட்டை கிலோ ஒன்று ரூ.14,000 வரை விலை போகிறது. விலையில் 80 சதவீதம் விவசாயிகளுக்கும், 20 சதவீதம் அரசுக்கும் என தற்போது நடைமுறை உள்ளது. 25 ஆண்டுகள் வளர்ந்த ஒரு மரம் சுமார் 50 கிலோ வரை இருக்கும்,’ என்றார்.


Next Story