சேலம் அருகே, குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்


சேலம் அருகே, குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 23 Oct 2018 3:45 AM IST (Updated: 23 Oct 2018 1:14 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.

சேலம் அருகே வீராணம் சின்னனூர் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். ஆனால் இந்த பகுதிக்கு சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சின்னனூர் கிராமத்தை சேர்ந்த பெண்கள் நேற்று காலிக்குடங்களுடன் எம்.ஜி.ஆர்.நகர் பகுதிக்கு திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த வீராணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, போலீசாரிடம் பெண்கள் கூறும்போது, எங்கள் பகுதிக்கு 10 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதால் அவதிப்பட்டு வருகிறோம். கிராமத்தில் மேல்நிலைத்தொட்டி இருந்தும் சரிவர தண்ணீர் வினியோகம் செய்வது இல்லை. இதுபற்றி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியத்துடன் செயல்படுகிறார்கள், என்று தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து சின்னனூர் ஊராட்சியில் உள்ள பணியாளர்கள் மூலம் உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

இதையடுத்து சாலை மறியலை பெண்கள் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story