8-ம் வகுப்பு மாணவன் திடீர் சாவு சத்து மாத்திரை தின்றது காரணமா? போலீசார் விசாரணை


8-ம் வகுப்பு மாணவன் திடீர் சாவு சத்து மாத்திரை தின்றது காரணமா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 23 Oct 2018 4:45 AM IST (Updated: 23 Oct 2018 3:43 AM IST)
t-max-icont-min-icon

தக்கலை அருகே 8-ம் வகுப்பு மாணவன் திடீரென்று இறந்தான். அவன், சத்து மாத்திரை தின்றதால் இறந்தானா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பத்மநாபபுரம்,

குமரி மாவட்டம் தக்கலை அருகே புலியூர்குறிச்சி கரும்பாறை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்(வயது 45). இவர் வீட்டிலேயே நகைப்பட்டறை வைத்துள்ளார். இவருடைய மனைவி சாரதா(40). இவர்களுக்கு 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்து 4 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால், கணவன்-மனைவி இருவரும் தக்கலை பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து ஒரு குழந்தையை தத்தெடுத்தனர். பின்னர், அந்த குழந்தைக்கு நிஷாந்த் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர்.

தற்போது நிஷாந்த் தக்கலை அருகே வில்லுக்குறி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று காலை வழக்கம்போல் நிஷாந்த் பள்ளிக்கு சென்றான். பள்ளியில் மதியம் உணவு இடைவேளைக்கு பிறகு நிஷாந்த் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டான். உடனே பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பெற்றோர் மாணவனை அங்குள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அப்போது மாணவனிடம் இதுபற்றி கேட்ட போது, தன்னுடன் படிக்கும் சக மாணவனிடம் ஒரு மாத்திரை வாங்கி சாப்பிட்டதாகவும், உடனே மயக்கம் வந்தது போல் இருந்தது என்றும் அந்த மாணவன் கூறியுள்ளான். சிறிது நேரத்தில் மாணவனின் நிலை கவலைக்கிடமானது. அவனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். மேல் சிகிச்சைக்காக வேறு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும்படி டாக்டர்கள் அறிவுறுத்தினர். மாணவனை வேறு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்படி இருந்தும் மாணவன் நிஷாந்த் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தான். நிஷாந்தின் உடலை பார்த்து பெற்றோர்கள் கதறி அழுதனர்.

இதுகுறித்து மாணவனின் தந்தை ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் விசாரணை நடத்தினர். மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நிஷாந்துக்கு சக மாணவன் கொடுத்ததாக கூறப்படும் மாத்திரை, அதே பள்ளியில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கொடுக்கப்பட்ட ஊட்டச்சத்து மாத்திரையா? அல்லது நிஷாந்த் தின்றது வேறு எதாவது விஷ மாத்திரையா என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக நிஷாந்த் கூறிய மாணவனிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

பள்ளிக்கூட மாணவன் இறந்த சம்பவம் முதலில் இரணியல் போலீஸ் நிலைய பகுதி என்றும், பின்னர் தக்கலை போலீஸ் நிலைய பகுதி என்றும் மாறி மாறி கூறப்பட்டது. இதனால் அந்த பகுதி நேற்று பரபரப்பாக காணப்பட்டது.

Next Story