ரெயில் தண்டவாள பகுதிகளில் மின்கோபுரங்கள் அமைப்பு: தஞ்சை-திருச்சி இடையே மின்மயமாக்கும் பணிகள்


ரெயில் தண்டவாள பகுதிகளில் மின்கோபுரங்கள் அமைப்பு: தஞ்சை-திருச்சி இடையே மின்மயமாக்கும் பணிகள்
x
தினத்தந்தி 22 Oct 2018 11:00 PM GMT (Updated: 22 Oct 2018 8:30 PM GMT)

தஞ்சை-திருச்சி இடையே மின்மயமாக்கும் பணிகள் இன்னும் 2 மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து தஞ்சை ரெயில் தண்டவாள பகுதிகளில் மின் கோபுரங்கள் அமைக்கும் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தஞ்சாவூர்,

தஞ்சை ரெயிவே வழித்தடம் பழமை வாய்ந்தது ஆகும். முன்பு இந்த வழியாகத்தான் சென்னை போன்ற பகுதிகளுக்கும், தென்மாவட்டங்களுக்கும் ரெயில்கள் இயக்கப்பட்டன. அப்போது தஞ்சை வழித்தடம் தான் மெயின் லைனாக இருந்தது. நாளடைவில் திருச்சி- விழுப்புரம் இடையே அகல ரெயில்பாதை அமைக்கப்பட்டு ரெயில்கள் அந்த வழியாக இயக்கப்பட்டன.

அதன் பின்னர் தஞ்சை வழியாக ரெயில்கள் இயக்குவது குறைக்கப்பட்டன. மேலும் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டமான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்கள் சுற்றுலா தலமாக விளங்கி வருகின்றன. இந்த பகுதியில் தான் தஞ்சை பெரிய கோவில், கல்லணை, அரண்மனை, தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில், திருவாரூர் தியாகராஜர் கோவில், நாகை மாவட்டத்தில் வேளாங்கண்ணி, நாகூர் தர்கா போன்ற புண்ணிய தலங்களும் உள்ளன. இதனால் இந்த வழியாக கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.

இதையடுத்து தற்போது தஞ்சை வழியாக 15-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களும், 20-க்கும் மேற்பட்ட பயணிகள் ரெயில்களும், வேளாங்கண்ணி, திருச்சி, மயிலாடுதுறை, காரைக்கால், எர்ணாகுளம், திருநெல்வேலி, ராமேசுவரம், கோயம்புத்தூர், சென்னை, கன்னியாகுமரி, புதுச்சேரி, திருச்செந்தூர், வாரணாசி, பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தஞ்சை- திருச்சி இடையே இரட்டை ரெயில்பாதை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது அது பயன்பாட்டுக்கு வந்து விட்டன. இதையடுத்து திருச்சி- காரைக்கால் இடையே மின்மயமாக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. இதன் மொத்த தூரம் 153 கி.மீ.ஆகும். இதற்காக ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த பணிகளை இந்திய ரெயில்வேயின் மின்மயமாக்கல் பிரிவு மேற்கொண்டுள்ளது.

இதில் தஞ்சை-திருச்சி இடையேயான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்டது. அப்போது தஞ்சை- திருச்சி இடையே இரட்டை ரெயில்பாதை பணிகள் நடைபெற்றதால் மின்மயமாக்கல் பணிகள் மெதுவாக நடைபெற்று வந்தன. இந்த நிலையில் இரட்டை ரெயில்பாதை பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் முடிந்து பயன்பாட்டுக்கு வந்தன. இதையடுத்து மின்மயமாக்கல் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

தஞ்சை-திருச்சி இடையே இருவழிப்பாதை என்பதால் இரண்டு வழித்தடத்திலும் மின் மயமாக்கல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக தஞ்சை-திருச்சி இடையே இருவழிப்பாதையிலும், ஒருவழிப்பாதைக்கு தலா 1,200 உயர் அழுத்த மின் கோபுரங்கள் என 2,400 மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது தஞ்சை சோழகம்பட்டியில் இருந்து திருச்சி பொன்மலை வரையில் பணிகள் முடிவடைந்து விட்டன.

இதையடுத்து சோழகம்பட்டியில் இருந்து பூதலூர் வரை மின்வயரிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆலக்குடியில் இருந்து தஞ்சை வரை மின்கோபுரங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தஞ்சை-திருச்சி இடையிலான பணிகளை இன்னும் 2 மாதத்துக்குள் (டிசம்பருக்குள்) முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

Next Story