திருவள்ளூரில் ‘ஆரோக்கிய பாரத பயணம்’ விழிப்புணர்வு பேரணி அமைச்சர் பாண்டியராஜன் தொடங்கி வைத்தார்


திருவள்ளூரில் ‘ஆரோக்கிய பாரத பயணம்’ விழிப்புணர்வு பேரணி அமைச்சர் பாண்டியராஜன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 23 Oct 2018 3:30 AM IST (Updated: 23 Oct 2018 2:33 AM IST)
t-max-icont-min-icon

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை அனுசரிக்கும்விதமாக ‘ஆரோக்கிய பாரத பயணம்’ என்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

திருவள்ளூர்,

திருவள்ளூரில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் நேற்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் உணவு பாதுகாப்புத்துறை சார்பில், மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை அனுசரிக்கும்விதமாக ‘ஆரோக்கிய பாரத பயணம்’ என்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை அமைச்சர் பாண்டியராஜன் தலைமை தாங்கி, கொடியசைத்து தொடங்கி வைத்தார். அவரும் பேரணியில் கலந்துகொண்டார்.

இதில் பள்ளி மாணவ-மாணவிகள், சாரண, சாரணியர் இயக்கத்தினர் மற்றும் அரசு ஊழியர்கள் பலர் கலந்துகொண்டு பேரணியாக சென்றனர். தாசில்தார் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று திருவள்ளூர் ஆயில்மில் பகுதியில் முடிவடைந்தது. அங்கு ஆரோக்கிய உறுதிமொழியை அமைச்சர் பாண்டியராஜன் வாசிக்க அதனை பின்தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

பின்னர் மாவட்ட அளவில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு அமைச்சர் பாண்டியராஜன் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இதில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், சப்-கலெக்டர் ரத்னா, பி.வேணுகோபால் எம்.பி., அ.தி.மு.க. திருவள்ளூர் மேற்கு மாவட்ட துணைசெயலாளரும், திருவள்ளூர் முன்னாள் நகர்மன்ற தலைவருமான கமாண்டோ அ.பாஸ்கரன், திருவள்ளூர் தாசில்தார் தமிழ்ச்செல்வன், திருவள்ளூர் நகர செயலாளர் கந்தசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story