ஒரே குடும்பத்தை சேர்ந்த கர்ப்பிணி உள்பட 3 பேருக்கு பன்றிக்காய்ச்சல் - தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை


ஒரே குடும்பத்தை சேர்ந்த கர்ப்பிணி உள்பட 3 பேருக்கு பன்றிக்காய்ச்சல் - தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 22 Oct 2018 10:15 PM GMT (Updated: 22 Oct 2018 9:07 PM GMT)

கோவையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த கர்ப்பிணி உள்பட 3 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவை, 

கோவை மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக டெங்கு, பன்றி, வைரஸ் உள்ளிட்ட காய்ச்சல்கள் பொதுமக்களை பாதித்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனை தடுக்க சுகாதாரத்துறை சார்பில், பொதுமக்கள் குடியிருப்பு பகுதி அருகே கிருமி நாசினி மருந்து தெளித்தல், டெங்கு கொசு புழுக்கள் உருவாகாத வகையில் மழை நீர் தேங்கும் பகுதிகளில் தண்ணீரை அப்புறப்படுத்துதல் உள்பட பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் இதுதொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் டெங்கு, பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட காய்ச்சல்கள் குறைந்தபாடில்லை. நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்தநிலையில் கோவை வடவள்ளி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த கர்ப்பிணி, அவருடைய கணவர், மாமியார் என 3 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அவர்கள் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த காய்ச்சல்கள் குறித்து அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் அசோகன் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் டெங்கு, பன்றிக்காய்ச்சல்களின் பாதிப்பு கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் பல மடங்கு குறைந்து உள்ளது. இந்த காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வருபவர்களை 24 மணி நேரமும் சிறந்த முறையில் கண்காணித்து தீவிர சிகிச்சை அளிக்கும் வகையில் அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சிறப்பு வார்டில் 50 படுக்கைகள் போடப்பட்டு கொசு புகுவதை தடுக்க கொசு வலை போடப்பட்டு உள்ளது.

மேலும் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுபவர்களுக்கு போதிய மருந்து, மாத்திரைகள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன. பொதுமக்கள் லேசான காய்ச்சல் ஏற்பட்டால் உடனே அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரி அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று மருத்துவரிடம் ரத்த பரிசோதனை செய்துகொள்வது நல்லது.
இதுபோன்ற காய்ச்சல்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குணப்படுத்த முடியும். தற்போது மழை நீர் மூலம் தொற்று வைரஸ் பரவுகின்றது. எனவே பொதுமக்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும். இந்த காய்ச்சல் குறித்து பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார். கோவை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று வைரஸ் காய்ச்சலுக்கு 35 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 2 பேரும் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Next Story