வருசநாடு அருகே, குடும்ப தகராறில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை
வருசநாடு அருகே, குடும்ப தகராறு காரணமாக 2 குழந்தைகளை கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கடமலைக்குண்டு,
வருசநாடு அருகேயுள்ள தர்மராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜீவ் (வயது 28). இவர் தேனியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ராம்பிரியா (25). இவர்களுக்கு அனன்யா (2), தர்ஷனா (1) என்ற 2 குழந்தைகள் இருந்தனர்.
கடந்த சில தினங்களாக கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ராம்பிரியா மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று காலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராம்பிரியா மனதை கல்லாக்கி கொண்டு தன்னுடைய 2 குழந்தைகளையும் கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டிற்கு வந்த ராஜீவ், மனைவி மற்றும் குழந்தைகள் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த கடமலைக்குண்டு போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் ராம்பிரியா மற்றும் அவருடைய குழந்தைகளின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பினர்.
இதற்கிடையே தாய் மற்றும் குழந்தைகள் சாவில் மர்மம் இருப்பதாக கூறி கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் ராம்பிரியாவின் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே இந்த சம்பவம் குறித்து முழுமையாக விசாரணை மேற்கொள்ளப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராம்பிரியாவுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளேயாவதால் பெரியகுளம் ஆர்.டி.ஓ. ஜெயப்பிரித்தா விசாரணை நடத்தி வருகிறார்.
2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் அப்பகுதி சோகத்தில் மூழ்கியது.
Related Tags :
Next Story